இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஓக்ஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 62 டெஸ்ட், 122 ஒருநாள், 33 டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்காக விளையாடியுள்ளார். அதில் 396 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் 2019 உலகக் கோப்பை உட்பட இங்கிலாந்தின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
கடைசியாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் அவர் இங்கிலாந்துக்காக விளையாடினார். அந்த தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய உதவினார். குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்யும் போது கையை உடைத்துக் கொண்டார்.
விடை பெற்ற ஓக்ஸ்:
அதையும் தாண்டி கடைசி நாளில் இங்கிலாந்தை தோல்வியிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் பேட்டிங் செய்ய வந்ததை மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவருக்கு அடுத்ததாக நடைபெறும் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் 36 வயதாகும் ஓக்ஸ் வருங்கால வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவருக்கு கலகலப்பான வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதாவது மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் ஓக்ஸ் வீசிய பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்த அவர் தனது பாதத்தில் பலத்த காயத்தை சந்தித்தார். அதனால் நடக்க முடியாமல் வண்டியில் ஏறிச்சென்ற அவரும் அடுத்த நாள் காயத்தை பொருட்படுத்தாமல் இந்தியாவின் வெற்றிக்காக களமிறங்கியது அனைவரது பாராட்டுகளைப் பெற்றது.
கலக்கப்பான வாழ்த்து:
அதை சுட்டிக்காட்டியுள்ள ரிசப் பண்ட் ஓய்வு பெறுவதற்கு முன் ஓக்ஸ் தாம் மேலே கோடு போட்டுள்ளதாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உங்களுக்கு மகிழ்ச்சியான ஓய்வு கிடைக்க வாழ்த்துக்கள் ஓக்ஸி. களத்தில் நீங்கள் அற்புதமாக இருந்தீர்கள். நிறைய ஒழுக்கம், பெரிய புன்னகை ஆகியவை உங்களிடம் எப்போதும் நல்ல அதிர்வுகளை வைத்திருந்தன”
இதையும் படிங்க: நம்ம இந்திய அணிக்கு என்ன தான் ஆச்சு? ஏன் வெட்கப்படுற மாதிரி பண்றங்க.. சயீத் கிர்மனி அதிருப்தி
“தற்போது ஒரு வழியாக நீங்கள் உங்களுடைய பந்து வீசும் கைக்கு ஓய்வு கொடுத்துள்ளீர்கள். என்னுடைய காலுக்கும் கூட ஓய்வு கொடுத்துள்ளீர்கள். ஓய்வு பெறுவதற்கு முன் நீங்கள் கண்டிப்பாக என் மேலே ஒரு கோட்டை விட்டுச் சென்றுள்ளீர்கள். இங்கிருந்து உங்களுக்கு சிறந்த பயணம் அமைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கிறிஸ் ஓக்ஸ் – ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



