மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது சொந்த மண்ணில் வைத்து அந்த அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதே வேளையில் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
உண்மையிலேயே அவர் சூப்பர் பிளேயர் : ரிஷப் பண்ட் பாராட்டு
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவிக்க 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் :
இந்த மைதானம் உண்மையிலேயே விளையாடுவதற்கு மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் எப்படி செயல்படுகிறது என்பதை கணிக்க துவங்கினோம். அந்த வகையிலேயே நாங்கள் மைதானத்தின் தன்மையை விரைவிலேயே உணர்ந்து விளையாடியதால் எங்களால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான துவக்கத்தை ஒரு வீரர் அளிக்கும் போது அது மிடில் ஆர்டரில் விளையாடுபவர்களுக்கு இன்னும் போட்டியை எளிதாக்குகிறது.
அந்த வகையிலேயே இந்த போட்டியில் நாங்கள் சூழலை கணித்து சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதேபோன்று மும்பை அணியும் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் இறுதி நேரத்தில் அழுத்தத்தை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அட்டகாசமாக பந்துவீசி வெற்றியை தேடித் தந்துள்ளனர். இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரை தேர்வு செய்தது ஒரு அற்புதமான விடயம் என்று நான் இப்போது தைரியமாக சொல்லலாம்.
இதையும் படிங்க : யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பல.. நாங்க தோத்ததுக்கு காரணம் இதுதான் – ஹார்டிக் பாண்டியா பேட்டி
அந்த அளவிற்கு ஷர்துல் தாகூர் மிகச்சிறப்பாக பந்துவீசி எங்களது அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். அதேபோன்று திக்வேஷ் ரதி எங்களது அணியில் மிகச் சிறப்பான பவுலர்களில் ஒருவர். இறுதி நேரத்தில் அவரும் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக செயல்பட்டுள்ளார் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



