பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் அடித்தும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இந்த தொடரில் தங்களது பத்தாவது தோல்வியை பெற்று கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : ரிஷப் பண்ட் பேச்சு
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 196 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் என்ற இலக்கினை துரத்திய வேளையில் 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியல் நான்காம் இடத்தினை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது : இந்த தோல்வி மிகக் கடினமான ஒன்று. இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்கு ஒரு கடினமான தொடராக அமைந்துள்ளது. ஆனாலும் இந்தத் தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து தலை நிமிர்ந்து செல்ல விரும்புகிறேன். இங்க தொடரில் பல்வேறு விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு போட்டியிலுமே 5 முதல் 10 ரன்கள் வரை கூடுதலாக அடிக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த போட்டியை பொருத்தவரை இந்த இலக்கு போதுமானது என்று நினைத்தோம். ஆனாலும் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது பந்து நின்று பேட்டுக்கு வந்ததால் பஞ்சாப் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணியை பொறுத்தவரை நிறைய பாசிட்டிவான விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக பேட்டிங்கில் ஜாஷ் இங்கிலீஷ், மிட்சல் மார்ஷ் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
இதையும் படிங்க : மும்பை எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கனு நினைக்குறேன்.. லக்னோவை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு
பிரின்ஸ் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். காயத்திற்கு பிறகு மீண்டு வந்த மோசின் கான் அருமையாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி தனது அனுபவத்தை இந்த தொடரில் காண்பித்துள்ளார். இப்படி ஏகப்பட்ட நல்ல விடயங்கள் இந்த தொடரில் இருந்தன. நிச்சயம் அடுத்த ஆண்டு இன்னும் பலமாக வருவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



