நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கையில் மிட்சல் மார்ஷ் உடன் இணைந்து துவக்க வீரராக ரிஷப் பண்ட் மைதானத்திற்குள் வந்தார்.
துவக்க வீரராக களமிறங்கியது ஏன்? : ரிஷப் பண்ட் விளக்கம்
கடந்த ஆண்டு மிட்சல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் துவக்க வீரர்களாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்த வேளையில் இம்முறை மார்க்ரமை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்கியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனாலும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய அவர் 9 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதன் பின்னர் மூன்றாவது இடத்தில் மார்க்ரம், 4-ஆவது இடத்தில் ஆயுஷ் பதோனி, ஐந்தாவது இடத்தில் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் விளையாடியிருந்தனர். இப்படி அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றம் பலரது மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 18.4 ஓவர்களிலேயே 141 ரன்கள் சுருண்ட நிலையில் பின்னர் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசியிருந்த லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான் துவக்க வீரராக களமிறங்கியது ஏன்? என்பது குறித்தும் தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் துவக்க வீரராக சென்று விளையாடும் பட்சத்தில் மிடில் ஓவர்களில் பூரான் பொறுப்பை ஏற்பார் என்பது எங்களது திட்டமாக இருந்தது.
அதோடு ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தால் பதோனி நான்காவது இடத்தில் களமிறங்கி தனது திறமையை காட்ட ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று இந்த முடிவுகளை எடுத்திருந்தோம். இந்த போட்டியில் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக நாங்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர முடியவில்லை.
இதையும் படிங்க : அஷுதோஷ் சர்மாவிற்கு பதிலாக சமீர் ரிஸ்விவை இம்பேக்ட் வீரராக களமிறக்கியது ஏன்? – அக்சர் படேல் விளக்கம்
இந்த போட்டியில் நான் ரன் அவுட்டானது உண்மையிலேயே துரதிஷ்டவசமானது தான் அதைப்பற்றி கவலைப்படாமல் நகர்ந்து செல்வது தான் சரியாக இருக்கும். இனிவரும் போட்டிகளிலும் கண்டிப்பாக நான் டாப் ஆர்டரில் தான் களமிறங்குவேன். துவக்க வீரராக களம் இறங்குவேனா என்பது 50-50 முடிவு தான் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



