
இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக மொத்தம் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. அதிகபட்சமாக அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். அவரது இந்த ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
அவர் அடித்த இந்த இரண்டு சதங்கள் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளையும் அவர் நிகழ்த்தி இருந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரியளவு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் அவர் முன்னாள் இந்திய வீரர் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்க்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் இரண்டாவது போட்டியின் போது ரிஷப் பண்ட் நிகழ்த்தயிருக்கும் சாதனை யாதெனில் :
இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 7 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்து முகமது அசாருதீன் 6 சதத்துடன் இருக்கும் வேளையில் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் சதங்களை அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
தற்போது ரிஷப் பண்ட் 5 சதங்களுடன் விராட் கோலியுடன் சமநிலையில் இருக்கிறார். அடுத்த போட்டியில் அவர் மேலும் ஒரு சதத்தை அடித்தால் விராட் கோலியை கடந்து முகமது அசாருதீனுடன் இணைவார். அதுமட்டும் இன்றி இந்த தொடரில் மேலும் 2 சதங்களை அவர் அடிக்கும் பட்சத்தில் சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரையும் சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பந்துவீச்சில் மட்டுமல்ல.. பேட்டிங்கின் மீதும் கவனத்தை திருப்பிய முகமது சிராஜ் – பயிற்சியில் ஏற்பட்ட நிகழ்வு
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.