முதல் டி20 போட்டி : மீண்டும் அசுரவேக பந்தினை ரிவர்ஸ் ஸ்வீப் செய்த ரிஷப் பண்ட் – வைரலாகும் வீடியோ

Pant

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தற்போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணி வீரர்களின் சிறப்பான பவுலிங்கால் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே குவித்தது.

அதிலும் குறிப்பாக முதல் நான்கு வீரர்களாக களமிறங்கிய தவான் 4 ரன்களிலும், ராகுல் ஒரு ரன்னிலும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும், ரிஷப் பண்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் இந்த 4 விக்கெட்டுகளும் விழுந்த பிறகு ரன்களே வராது என்று எதிர்பார்த்த நிலையில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் இறுதிவரை போராடி 48 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்டிக் பண்டியா 21 பந்துகளைச் சந்தித்த நிலையில் 19 ரன்கள் குவித்து அதிர்ச்சியளித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 124 ரன்களை மட்டுமே குவிக்க தற்போது 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

சமீபகாலமாக டெஸ்ட் போட்டியில் பயமின்றி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆண்டர்சனின் அதிவேக பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு சிக்சர் அடித்தார். அதே போன்று இன்றைய போட்டியிலும் ஆர்ச்சரின் அசுர வேகத்தில் மீண்டும் சற்றும் பயமின்றி ரிவர்ஸ் ஸ்வீப் செய்து விக்கெட் கீப்பர் தலைக்குமேல் சிக்சரை விளாசினா.

- Advertisement -

இந்த சிக்ஸர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்திலும் இப்போது வைரலாகி வருகிறது.