
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேச அணியை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக அப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் சதமடித்து 109 ரன்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை சமன் செய்தார். அந்த வகையில் மீண்டும் அவர் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
முன்னதாக அப்போட்டியில் இந்தியாவின் அபார ஆட்டத்தால் வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ செய்வதறியாது தடுமாறினார். அப்போது ஒரே பகுதியில் 2 ஃபீல்டர்கள் இருப்பதை பார்த்த ரிஷப் பண்ட் “பாய் ஒருவரை மிட் விக்கெட் திசையில் நிறுத்துங்க” என்று வங்கதேச கேப்டனிடம் ஜாலியாக சொன்னார். அதைக் கேட்டு வங்கதேச கேப்டனும் ஃபீல்டரை ரிசப் பண்ட் சொன்ன இடத்தில் நிறுத்தியது வைரலானது.
குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனியும் இப்படி வங்கதேசத்துக்கு எதிராக சரியான ஃபீல்டிங் செட்டிங் செய்தார். அதே போல அவரும் செய்தது ரசிகர்களை பாராட்ட வைத்தது. இந்நிலையில் எதிரணி மற்றும் சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாம் விளையாடும் போட்டி தரமானதாக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் சந்தித்த போது முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கூறியதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
அதன் படி அந்த நேரத்தில் தமக்கு எதிராக வங்கதேசத்தின் ஃபீல்டிங் நன்றாக இல்லை என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அதனாலயே அதை மாற்றியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசிது பின்வருமாறு. “களத்திற்கு வெளியே இருக்கும் போது நான் தொடர்ந்து அஜய் பாயிடம் பேசி வருகிறேன். யாருக்கு எதிராக விளையாடினாலும் நாம் விளையாடும் கிரிக்கெட்டின் தரம் எப்போதும் முன்னேற வேண்டும் என்று அவர் சொல்வார்”
இதையும் படிங்க: 68 ரன்ஸ் 2 விக்கெட்ஸ்.. நியூஸிலாந்தின் சச்சினாக வில்லியம்சன் சாதனை.. இலங்கைக்கு தனியாளாக சவால் தரும் ரவீந்திரா
“அந்த சூழ்நிலையில் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டர்கள் இல்லாததை நான் பார்த்தேன். மற்றொரு பக்கத்தில் 2 ஃபீல்டர்கள் ஒரே இடத்தில் இருப்பதை பார்த்தேன். எனவே அதில் ஒருவரை மிட் ஃபீல்ட் திசைக்கு நகர்த்துமாறு சொன்னேன்” என்று கூறினார். அந்த வகையில் எதிரணியின் ஃபீல்டிங் தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் அப்படி செய்தது குறிப்பிடத்தக்கது.