
இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியானது முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 471 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 147 ரன்களையும், ரிஷப் பண்ட் 134 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
அந்த வகையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 209 ரன்களை குவித்துள்ளது. அதன் காரணமாக 262 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாட இருக்கிறது. நேற்றைய போட்டியின் போது மிகச் சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 134 ரன்களில் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தது இந்திய அணியின் ரன் சரிவிற்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் 178 பந்துகளை சந்தித்த பண்ட் 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 134 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் அவரது விக்கெட் விழ பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டி உள்ளார். ஏனெனில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்ட் தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடினார்.
ஆனால் அந்த நேரத்தில் சுப்மன் கில் மற்றும் கருண் நாயர் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே அவரை சற்று பொறுமையாக விளையாடும் படி கௌதம் கம்பீர் ஓய்வறையில் இருந்து மெசேஜ் ஒன்றினை மாற்றுவீரர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்த சில ஓவர்கள் ரிஷப் பண்ட் பந்தினை தடுத்து விளையாட முயன்றார்.
அப்படி அவருக்கு இயல்பாகவே வராத ஒரு விஷயத்தை முயற்சி செய்ததாலேயே ஜோஸ் டங் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடியிருந்தால் நிச்சயம் அந்த விக்கெட் விழுந்து இருக்காது என்பதே உண்மை. இந்நிலையில் இந்த நிகழ்வை வர்ணனையின் போது சரியாக சுட்டிக் காட்டிய தினேஷ் கார்த்திக் :
இதையும் படிங்க : 25 இன்னிங்சில் 10 ஆவது முறை.. ஜோ ரூட்டை கட்டம் கட்டி தூக்கி ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை – விவரம் இதோ
“சில வீரர்களுக்கு தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்” என கம்பீர் செய்த தவறினை சுட்டிக்காட்டினார். ஏனெனில் ரிஷப் பண்ட் பயமற்ற அதிரடியான ஆட்டத்தை விளையாடக்கூடியவர். அவரை தடுத்து விளையாட சொன்னால் இப்படித்தான் விக்கெட் விழும் என்பதை தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.