அநீதிக்கு அடங்கமாட்டோம் ! தல தோனி வழியில் அம்பயருக்கு எதிராக குரல் கொடுத்த பண்ட் – என்ன நடந்தது?

MS Dhoni Rishbh Pant Vs Umires
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 34-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சரவெடியாக பேட்டிங் செய்து 222/2 ரன்கள் குவித்து இந்த வருடம் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் தேவ்தூத் படிக்கல் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 155 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே ராஜஸ்தானை முன்னிலைப்படுத்தினர்.

இதில் படிக்கள் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுக்க மறுபுறம் தொடர்ந்து டெல்லிக்கு கருணை காட்டாமல் டெல்லி பவுலர்களை பிரித்து மேய்ந்து பவுண்டரிகளை தெறிக்கவிட்ட ஜோஸ் பட்லர் 65 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சர் உட்பட சதமடித்து 116 ரன்கள் விளாசினார். இது இந்த வருடம் அவர் அடிக்கும் 3-வது சதமாகும். கடைசியில் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 3 சிக்சருடன் 46* (19) ரன்கள் நொறுக்கினார்.

- Advertisement -

போராடிய டெல்லி:
அதை தொடர்ந்து 223 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 28 (14) ரன்கள் எடுக்க அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதே சமயம் மற்றொரு தொடக்க வீரர் பிரிதிவி ஷா தனது பங்கிற்கு அதிரடியாக 37 (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 44 (24) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். அந்த நேரத்தில் அடுத்து வந்த அக்ஷர் பட்டேல் 1 (4), ஷார்துல் தாக்கூர் ஆகியோர் 10 (7) ரன்களில் அவுட்டானதால் டெல்லிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இருப்பினும் நடுவரிசையில் வெற்றிக்கு போராடிய லலித் யாதவ் 37 (24) ரன்களில் ஆட்டமிழந்ததால் டெல்லியின் தோல்வி உறுதியான நிலையில் கடைசியில் ரோவ்மன் போவல் அதிரடியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டு 36 (15) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 207/8 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி போராடி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் எடுத்தார். மறுபுறம் 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

- Advertisement -

இழைக்கப்பட்ட அநீதி:
முன்னதாக இப்போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது அதை ஓபேத் மெக்காய் வீசிய நிலையில் முதல் 3 பந்துகளை சந்தித்த ரோவ்மன் போவல் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்சர்களை தெறிக்கவிட்டு மிரட்டினார். அதில் 3-வது பந்தை புல் டாசாக வீசப்பட்ட நிலையில் அதை போவல் சிக்சர் அடித்த போதிலும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்தது. அதே சமயம் இடுப்புக்கு மேல் வந்த காரணத்தால் அது நோ-பால் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த அனைவருக்கும் எந்த தீர்ப்பையும் வழங்காத அம்பயர் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தார்.

அடிப்படை விதிமுறைப்படி களத்தில் இருக்கும் அம்பயருக்கு அது நோபால் என்று சரியாக தெரியவில்லை எனும் பட்சத்தில் 3-வது அவரை அணுகி முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாத களத்தில் இருந்த அம்பயர் தன்னிச்சையாக நடந்து கொண்டதால் ஆத்திரமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அவருக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் களத்தில் இருந்த குல்தீப் யாதவ் மற்றும் போவெல் ஆகிய இருவரையும் பெவிலியனுக்கு அழைத்தார். அதேநேரம் டெல்லியின் ஒரு பயிற்சியாளர் பர்வின் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார்.

- Advertisement -

தல தோனி வழியில்:
இருப்பினும் கூட தனது முடிவில் மாற்றம் செய்யாமல் விடாப்பிடியாக நின்ற அம்பயர் டெல்லி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்ப மறுத்ததால் ஒருவழியாக எஞ்சிய போட்டி சர்ச்சைக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது. இருப்பினும் அம்பயர் கொடுத்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக சற்றும் அஞ்சாத ரிஷப் பண்ட் அதற்கு எதிராக பயமின்றி குரல் கொடுத்து இந்தியா மற்றும் சென்னையில் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வழியில் நடந்து கொண்டார்.

ஆம் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் இதே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி கட்ட ஓவர்களில் இதேபோன்ற ஒரு இடுப்புக்கு மேல் வந்த பந்தை களத்தில் இருந்த முதல் அம்பயர் நோ பால் கொடுக்க முயன்ற நிலையில் அதை பக்கவாட்டில் இருந்து வந்த அம்பயர் நோ-பால் இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தினார்.

இதையும் படிங்க : பிரவீன் ஆம்ரேவை மைதானத்திற்குள் அனுப்பியது தப்பு தான். ஆனா ஏன் அப்படி பண்ணேன் தெரியுமா? – பண்ட் விளக்கம்

அந்த அநீதியால் எப்போதுமே கூலாக காட்சியளிக்கும் எம்எஸ் தோனி எதற்கும் அஞ்சாமல் மைதானத்திற்குள் நேரடியாக நுழைந்து அவரிடம் நியாயமாக கேள்வி கேட்டார். இறுதிவரை அந்த தீர்ப்பு மாற்றப்படவில்லை என்றாலும் நியாயமாக கேள்வி கேட்ட எம்எஸ் தோனியை பல ரசிகர்களும் பாராட்டினர். தற்போது அதே போலவே அநீதிக்கு அஞ்ச மாட்டோம் என்ற வகையில் தல தோனியின் வழியில் அவரின் சிஷ்யனான ரிஷப் பண்ட் நடந்து கொண்டுள்ளது பல ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Advertisement