IND vs BAN : டெஸ்டில் மாஸ் காட்டும் ரிஷப் பண்ட் – தோனியின் சாதனைகளை உடைத்து 2 புதிய வரலாற்று சாதனை

Pant
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த நிலைமையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு சுருண்டது. சாண்டோ 24, ஜாகிர் ஹசன் 15, கேப்டன் சாகிப் அல் ஹசன் 16, ரஹீம் 26 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 10, சுப்மன் கில் 20 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் நிதானத்தை வெளிப்படுத்த முயன்ற புஜாரா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்களும் தலா 24 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 94/4 என தடுமாறிய இந்தியாவை அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

டெஸ்டில் கில்லி:
அதில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் தமக்கே உரித்தான பாணியில் வங்கதேச பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ரிஷப் பண்ட் பவுண்டரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்தார். 5வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்த இந்த ஜோடியில் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதத்தை நெருங்கிய ரிஷப் பண்ட் துரதிஷ்டவசமாக 93 ரன்களில் அவுட்டாகி சென்றார். அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 10 பவுண்டரி 2 சிக்சருடன் சதத்தை நெருங்கினாலும் 87 ரன்களை அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய போதிலும் முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு அவுட்டான இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் வங்கதேசம் 7/0 ரன்கள் எடுத்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். முன்னதாக இப்போட்டியில் இந்தியா தடுமாறிய போது ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்து 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிசப் பண்ட் சதத்தை தவற விட்டு விட்டாரே என்று ரசிகர்கள் வருந்தும் அளவுக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

குறிப்பாக முதல் பந்திலிருந்தே அதிரடியை துவங்கிய அவர் வெறும் 49 பந்துகளிலேயே அரை சதம் கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற தோனியின் 15 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு இதே தாக்கா மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 50 பந்துகளில் தோனி 51* ரன்களை குவித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

அத்துடன் 93 ரன்கள் குவித்த அவர் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையை தவிர்த்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு இதே தாக்கா மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் தோனி 89 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: போன வருஷம் 15 கோடிக்கு விலைபோன வீரரை இம்முறை வெறும் 1 கோடிக்கு தட்டிதூக்கிய சி.எஸ்.கே – நல்ல ஐடியா

முன்னதாக சவாலான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ள ரிசப் பண்ட் அப்போதும் இப்போதும் டெஸ்ட் போட்டிகளில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தன்னை கில்லி என்று நிரூபித்து வருகிறார். அவ்வளவு திறமை இருந்தும் அதிரடியாக விளையாட வேண்டிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் சொதப்புவது தான் ரசிகர்களுக்கு இப்போதும் ஆச்சரியமாக அமைகிறது.

Advertisement