ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு உச்சகட்ட போட்டி காணப்படுகிறது. அதில் ரிசப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் நடப்பு சீசனில் அடுத்த ஒரு போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இந்த வருடம் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவருடைய தலைமையில் டெல்லி ஏற்கனவே 2 போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
ரிஷப் பண்ட்க்கு தடை:
அதனால் முதல் தவறை செய்த போது அவருக்கு மட்டும் ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் அபராதத்தை விதித்திருந்தது. அதே தவறு மீண்டும் நடந்ததால் 2வது முறை ரிஷப் பண்ட்டையும் சேர்த்து மொத்த டெல்லி அணிக்கும் குறிப்பிட்ட அளவு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில் மீண்டும் டெல்லி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
எனவே ஒரே வருடத்தில் 3வது முறையாக அந்த தவறை செய்ததால் தற்போது டெல்லியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையுடன் 30% அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு டெல்லி அணி நிர்வாகம் சார்பில் பிசிசிஐயிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நடுவரின் முடிவே தீர்ப்பு இறுதியானது என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிசிசிஐ கை வைத்துள்ளது.
இதன் காரணமாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற உள்ள அடுத்த போட்டியில் ரிசப் பண்ட் டெல்லி அணிக்காக விளையாட மாட்டார். அப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா சூழ்நிலையில் டெல்லி இருக்கிறது. அப்படிப்பட்ட போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தோத்து போனாலும் கடைசி நேரத்தில் தோனியின் சிறப்பான பினிஷிங்கால் தப்பிய சி.எஸ்.கே – பிளேஆப் வாய்ப்பு இருக்கா?
மேலும் அந்த போட்டியில் ஏற்கனவே துணை கேப்டனாக செயல்பட்டு வரும் அக்சர் படேல் டெல்லி அணியை வழி நடத்துவார் என்று ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். அந்த வகையில் ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த கடுமையான நடவடிக்கை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடி வரும் ரிஷப் பண்ட் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்துள்ளார்.