தன்னுடைய முரட்டு சிக்ஸரால் காயமடைந்த கேமராமேன்.. கடைசியில் ரிஷப் பண்ட் செய்த நெகிழ்ச்சி செயல்

- Advertisement -

2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற 40வது லீக் போட்டியில் குஜராத்தை வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அதனால் நான்காவது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் நூலிலையில் வெற்றியை தவற விட்டு 5வது தோல்வியை பதிவு செய்த குஜராத் 7வது இடத்திற்கு சரிந்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சிறப்பாக விளையாடி 225 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 88*, அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தனர். அதைத் துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 6, ஓமர்சாய் 1, ஷாருக்கான் 8, ராகுல் திவாட்டியா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் மன்னிப்பு:
அதனால் சாய் சுதர்சன் 65, டேவிட் மில்லர் 55, சகா 39 ரன்கள் எடுத்தும் குஜராத் போராடி தோல்வியை சந்தித்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக ரசிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக விளையாடிய கேப்டன் ரிசப் பண்ட் 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் 88* (43) ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 2, 6, 4, 6, 6, 6 என அடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் மொத்தம் 30 ரன்கள் அடித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் மொத்தமாக இப்போட்டியில் அவர் அடித்த 8 சிக்சர்களில் ஒரு முரட்டுத்தனமான சிக்சர் போட்டியை படம் பிடித்துக் கொண்டிருந்த “தேபாசிஷ்” எனும் பெயரை கொண்ட கேமராமேன் மேலே பட்டு காயத்தை ஏற்படுத்தியது. அதற்காக போட்டியின் முடிவில் ரிஷப் பண்ட் மனதார மன்னிப்பு கேட்டது பின்வருமாறு.

- Advertisement -

“மன்னிக்கவும் தேபாஷிஷ் பாய். வேண்டுமென்றே உங்களை அடிக்கவில்லை. ஆனால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள் என்று நினைக்கிறேன். அதற்காக வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். ஐபிஎல் நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கார் விபத்தால் விளையாடாத ரிஷப் பண்ட் இந்த வருடம் முழுமையாக குணமடைந்து மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: முக்கியமான 19 ஆவது வீரரை ராஷிக் டார் சலாமை வீசவைக்க காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் ஓபன்டாக்

அந்த வாய்ப்பில் இதுவரை 9 போட்டிகளில் 342 ரன்கள் அடித்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் டெல்லியின் வெற்றிகளில் பங்காற்றி 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் அட்டகாசமாக செயல்படுவதால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement