
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி வெற்றி பெறவே முடியாது என்று பார்க்கப்பட்ட ஒரு போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த ரிங்கு சிங் அந்த ஒரு போட்டிக்கு பின்னர் உலகளவில் கவனத்தை ஈர்த்த வீரராக மாறினார். அதோடு தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியிலு இடம் பிடித்திருந்தார்.
அப்படி இந்திய அணியில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரையே இந்திய அணியின் அடுத்த பினிஷராகவும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். மேலும் டி20 உலக கோப்பை தொடரில் அவரே இந்திய அணியின் ஃபினிஷராக செயல்பட வேண்டும் என்ற தங்களது விருப்பங்களையும் தெரிவித்து வந்தனர். அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் அவரை மனதார பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதன்மை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் பேக்கப் வீரராக மட்டுமே ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டது அவருக்கு வருத்தம் அளித்திருந்தாலும் அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் பேட்டிங் வரிசையில் கீழேதான் இறங்கி பேட்டிங் செய்து வருகிறேன்.
அணிக்கு எது நல்லது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும் தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எனக்கு பேட்டிங் செய்ய அதிகளவு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை. அதேவேளையில் நான் சரியாக பேட்டிங் செய்தேனா? இல்லையா? என்பது முக்கியமல்ல அணியின் நலனுக்காக நான் பின் வரிசையில் களமிறங்கி வெற்றிக்காக போராட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம்.
என்னை பொறுத்தவரை எங்கு களமிறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். நான் எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அணிக்கு அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதனை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அனைத்து வடிவமான கிரிக்கெட்டிலும் விளையாடுவதே என்னுடைய ஆசை. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க : இனி ரிஷப் பண்ட்டால நிச்சயமா கிரிக்கெட் ஆடவே முடியாதுன்னு நெனச்சேன் – மனம்திறந்த ரிக்கி பாண்டிங்
அடுத்ததாக நான் விரைவில் டெஸ்ட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன். கிரிக்கெட்டில் மிகப்பெரிய விஷயம் என்றால் டெஸ்ட் கிரிக்கெட் தான். டி20 போட்டிகளில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அனைவருக்குமே வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.