
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சனங்களை உண்டாக்கியது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை வென்று கடந்த சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது பலரையும் கோபமடைய வைத்தது.
அதைப்பற்றி கேட்டதற்கு யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸை எடுக்க முடியும்? என்பதை நீங்களே சொல்லுங்கள் எனத் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்தார். அதற்கு 2025 ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக விளையாடிய ரிங்கு சிங் மற்றும் சிவம் துபேவுக்கு பதிலாக ஸ்ரேயாஸை எடுத்திருக்கலாமே? என்று ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்களும் நிறைய ரசிகர்களும் அகர்கரை சாடினார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தரபிரதேசத்தில் யூபி டி20 லீக் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஆகஸ்ட் 29ஆம் தேதி லக்னோவில் 9வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் மீரட் மார்விக்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கோரக்பூர் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 167/9 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் துருவ் ஜுரேல் 38 (32), குஷ்வாஹ் 37 (24), சிவம் சர்மா 25* (14) ரன்கள் அடித்தனர். மீரட் அணிக்கு அதிகபட்சமாக விஷால் சவுத்ரி, விஜயகுமார் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து களமிறங்கிய மீரட் அணிக்கு அக்சய் துபே 11, சிகாரா 10, ரிட்டுராஜ் சர்மா 5, கௌசிக் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 7.6 ஓவரில் 38/4 என சரிந்த மீரட் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது களமிறங்கிய கேப்டன் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். எதிர்ப்புறம் அவருக்கு சகாப் சிங் நங்கூரமாக விளையாடி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்தி மறுபுறம் கோரக்பூர் பவுலர்களை வெளுத்து வாங்கிய ரிங்கு அரை சதத்தை அடித்தார்.
தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் வாசு வாட்ஸ் வீசிய 19வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு 45 பந்துகளில் சதத்தை அடித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்ட ரிங்கு 108* (48) ரன்களை 225 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சகாப் 22* (22) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே 168/4 ரன்களை எடுத்த மீரட் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடுமா? – மத்திய அரசு கூறுவது என்ன?
அந்த அணிக்கு சதத்தை அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிங்கு ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் 2025 ஐபிஎல் தொடரில் கொஞ்சம் தடுமாறியதை வைத்து 2025 ஆசியக் கோப்பையில் விளையாடத் தேர்வான தம்மை குறைத்து மதிப்பிட்டு பேசியவர்களுக்கும் ரிங்கு பதிலடி கொடுத்துள்ளார்.