இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்தாக் அலி கோப்பையின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் அசத்திய உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய காலிறுதி போட்டி நவம்பர் 2ஆம் தேதி மொகாலியில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து பேட்டிங் செய்த உத்தரப்பிரதேசம் அணிக்கு அபிஷேக் கோஸ்வால் 16 ரன்னில் அவுட்டாக கேப்டன் கரன் சர்மாவும் 14 (24) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திர நித்திஷ் ராணாவும் 17 ரன்களில் ரன் அவுட்டானதால் 11.1 ஓவரில் 53/3 என சரிந்த உத்திரபிரதேசம் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அசத்திய ரிங்கு:
ஆனால் நான் இருக்கும் வரை அது நடக்காது என்பது போல் அடுத்ததாக வந்த நட்சத்திர இளம் வீரர் ரிங்கு சிங் களமிறங்கியது முதலே தமக்கே உரித்தான அதிரடியான பாணியில் பவுண்டரிகளை பறக்க விட்டு வேகமாக ரன்களை சேர்த்தார். அவருடன் சமர் ரிஸ்வி தம்முடைய பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 100 ரன்கள் கடந்த உத்தரப்பிரதேசம் சரிவிலிருந்து மீண்டது.
அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் கடைசி நேரத்தில் பஞ்சாப் பவுலர்களை வெளுத்து வாங்கிய ரிங்கு சிங் 4 பவுண்டரி 6 சிக்சருடன் அரை சதம் கடந்து 77* (33) ரன்களை 233.33 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ரிஸ்வி தம்முடைய பங்கிற்கு 1 பவுண்டரி 4 சிக்சருடன் 42* (29) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் உத்தரபிரதேசம் 169/3 ரன்கள் எடுத்தது.
குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய ரிங்கு சிங் காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். அதே போலவே இந்த போட்டியிலும் தன்னுடைய மாநில அணியை அதிரடியாக விளையாடி காப்பாற்றிய அவர் மீண்டும் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்பதை அடையாளப்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் 2006ல கழுதைக்கு என் பேர வச்சாங்க.. அதுக்கு காரணம் இது தான்.. பின்னணி பகிர்ந்த மார்ட்டின்
இருப்பினும் அதைத் தொடர்ந்து 170 ரன்கள் துரத்திய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் ஷர்மா 12, பிரசிம்ரன்சிங் 0, கேப்டன் மந்தீப் சிங் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் அன்மொல்ப்ரீத் சிங் 43 (29), நேஹல் வதேரா 52 (39), சன்விர் சிங் 35* (13), ரமந்திப் சிங் 22* (13) ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடியதால் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் உத்தரபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 3, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்கள் எடுத்தும் இத்தொடரிலிருந்து வெளியேறியது.