IPL 2023 : எனக்கு தோனி கொடுத்த சிம்பிள் அட்வைஸ் அது தான் – புதிய ஃபினிஷராக அசத்தும் ரிங்கு சிங் ஓப்பன்டாக்

- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் அந்த அணிக்கு சேசிங் செய்யும் போதெல்லாம் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் இளம் வீரர் ரிங்கு சிங் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகவும் பினிஷராகவும் உருவெடுத்துள்ளார்.

சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து கடினமாக போராடி உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த சில வருடங்களாகவே கொல்கத்தா அணியில் விளையாடி வரும் அவர் கடந்த சீசனில் முதல் முறையாக லக்னோவுக்கு எதிராக போராடி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். ஆனாலும் அதில் வெற்றி காண முடியாத அவர் இந்த சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை பறக்க விட்டு யாருமே எதிர்பாராத வரலாறு காணாத சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

தோனியின் ஆலோசனை:
அதே போல பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக விளையாடி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்த போது கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷிதீப் சிங் வீசிய அந்த பந்தை பவுண்டரியாக பறக்க விட்ட அவர் மீண்டும் கொல்கத்தாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 போட்டிகளில் கடைசி பந்தில் வெற்றி பெறும் ரன்களை அடித்த வீரர் என்ற தோனி, மில்லர் போன்ற நட்சத்திர பினிஷர்கள் கூட செய்யாத சாதனையைப் படைத்த அவர் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 21 சிக்ஸர்களுடன் 337 ரன்களை 151.12 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து கடந்த சீசன்களை விட இந்த வருடம் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இருப்பினும் ஃபுல் டாஸ் பந்துகளை அடித்து பெரிய ஆளானதாக அவர் மீது சில விமர்சனங்களும் காணப்படுகின்றன. ஆனால் திறமையில்லாமல் அவ்வளவு பெரிய அழுத்தமான கடைசி ஓவரில் எட்ஜ் கொடுக்காமல் பவுண்டரிகளை அடிக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்படி அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் இந்த சீசனில் சென்னைக்கு எதிரான போட்டியிலும் 53 (33) ரன்களை அடித்து போராடியும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

இருப்பினும் அந்தப் போட்டியில் வரலாற்றின் மிகச் சிறந்த ஃபினிஷராக போற்றப்படும் தோனியிடம் சில எளிமையான ஆலோசனைகளை கேட்டறிந்ததாக ரிங்கு சிங் கூறியுள்ளார். குறிப்பாக தற்போது வெளிப்படுத்தும் பேட்டிங்கில் இருந்து இன்னும் முன்னேறுவதற்கு ஏதாவது ஆலோசனை கொடுக்குமாறு தோனியிடம் கேட்டதாக தெரிவிக்கும் ரிங்கு சிங் இது பற்றி கொல்கத்தா இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“உலகின் மிகச் சிறந்த பினிஷரான அவரிடம் “பைய்யா பேட்டிங் செய்ய நான் களமிறங்கும் போது இன்னும் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டேன். அதற்கு அவர் “எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காதே. பந்து வருவதற்காக காத்திருந்து அதற்கேற்றார் போல் அதிரடியாக விளையாடு” என்று ஆலோசனை தெரிவித்தார். அந்த வகையில் நான் எப்போதுமே எளிமையான ஷாட்டுகளை அடிக்க விரும்புகிறேன். குறிப்பாக ஆடம்பரமான ஷாட்களை நான் அடிக்க விரும்புவதில்லை. மேலும் சூழ்நிலைக்கேற்றார் போல் பந்துகளை எதிர்கொண்டு நான் விளையாடுகிறேன்”

இதையும் படிங்க: CSK : மேட்சுக்கு முன்னாடியே தோனி இதுதான் நடக்கும்னு என்கிட்ட சொல்லிட்டாருங்க – தீபக் சாஹர் பகிர்ந்த சுவாரசியம்

“மற்ற வீரர்களைப் போலவே நானும் எனக்கு வரும் ஷாட்களில் உழைத்து எளிமையாக விளையாட விரும்புகிறேன். எங்களுக்கு எஞ்சியிருக்கும் 3 போட்டிகளிலும் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம். எனவே நாங்கள் ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்த உள்ளோம்” என்று கூறினார். இதை தொடர்ந்து இன்று ராஜஸ்தான எதிர்கொள்ளும் கொல்கத்தா அடுத்ததாக சென்னையை சந்தித்து கடைசி போட்டியில் லக்னோவை எதிர்கொண்டு வெற்றிக்கு போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement