IPL 2023 : எங்கள் நாட்டின் மைக்கேல் பெவன், மைக் ஹசி மாதிரி அவர் அட்டகாசமா ஆடுறாரு – இளம் இந்திய வீரரை பாராட்டிய டாம் மூடி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் யசஸ்வி ஜெய்ஸ்வால், ஜிதேஷ் சர்மா போன்ற இளம் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் முனைப்புடன் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியின் வெற்றிகளில் போராடினர். அந்த வரிசையில் லீக் சுற்றுடன் வெளியேறிய கொல்கத்தா அணிக்கு ரிங்கு சிங் அட்டகாசமாக பேட்டிங் செய்து 474 ரன்கள் எடுத்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டதே ஒரே ஆறுதலாக அமைந்தது. சிலிண்டர் விற்பவரின் மகனாக சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் அளவில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கடந்த 2018 முதல் கொல்கத்தா அணியில் இருந்து வருகிறார்.

Rinku Singh

ஆனாலும் நிலையற்ற வாய்ப்புகள் பெற்ற அவர் கடந்த வருடம் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை கொல்கத்தாவை அழைத்து வந்தார். அதன் காரணமாக இந்த வருடம் முழுமையாக 14 போட்டிகளில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற அவர் 474 ரன்களை குவித்து கொல்கத்தா பதிவு செய்த முக்கிய வெற்றிகளின் பங்காற்றினார். அதிலும் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை பறக்க விட்டு நம்ப முடியாத அசாத்தியமான வெற்றி பெற்று கொடுத்த அவர் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியுடன் சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார்.

- Advertisement -

மைக்கேல் பெவன் மாதிரி:
அதை விட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோன பின்பும் லக்னோக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 177 ரன்கள் துரத்திய கொல்கத்தாவுக்கு இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறிய நிலையில் மீண்டும் கடைசி நேரத்தில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட அவர் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 67* (33) ரன்களை விளாசி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அதனால் 1 ரன்னில் வென்ற லக்னோ அணியினர் மட்டுமல்லாமல் அனைவருமே அழுத்தமான நேரத்தில் பதறாமல் பேட்டிங் செய்யும் அவருடைய திறமையை வியந்து மனதார பாராட்டினர்.

Rinku Singh 2

அப்படி அழுத்தமான நேரங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறி லேட்டஸ்ட் ஃபினிஷராக அவதரித்துள்ள ரிங்கு சிங் வரலாற்றின் முதல் பினிஷர் என்று கொண்டாடப்படும் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் மற்றும் மைக் ஹசி போன்றவர்களைப் போல் செயல்படும் திறமை கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் டாம் மூடி பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சந்தேகமின்றி இந்த விளையாட்டில் அவர் தனக்கான அடித்தளத்தை அமைத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் 60 பேட்டிங் சராசரியை கொண்டுள்ள அவர் தனது விளையாட்டுக்கு பரம்பரையாக இருக்கிறார். அவரிடம் நல்ல டெக்னிக் இருக்கிறது”

- Advertisement -

“அவர் கிரீஸில் சிறந்த சமநிலை மற்றும் அமைதியுடன் விளையாடும் தன்மையைப் பெற்றுள்ளார். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளிலும் பொறுமையாக இருக்கும் அவருடைய குணம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பொதுவாக ஃபினிஷர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பதுடன் எப்படி போட்டியை முடிக்கலாம் என்று உள்ளுக்குள் கணக்கிட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த திறமைகளை அவரும் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை அவருடன் நான் இணைந்து செயல்படவில்லை என்பதால் அவரைப் பற்றி எனக்கு தெரியாது”

“ஆனால் ஒரு ரசிகனாக அவரிடம் பொறுமையும் கட்டுப்பாடும் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு முன் அந்த குணங்களை நான் மைக்கேல் பெவனிடம் பார்த்துள்ளேன். ஒருநாள் கிரிக்கெட்டில் கைமீறி சென்ற போட்டிகளிலும் அவர் பதறாமல் இருந்து கட்டுப்பாட்டுடன் விளையாடுவார். அவரைப் போலவே மைக் ஹசியும் பதறாமல் எப்படி ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்ற புரிதலை கொண்டவர்”

இதையும் படிங்க:14 மேட்ச்சும் அவரைபத்தி பேசிட்டேன். இனிமே அவரைப்பத்தி உலகம் பேசும் – இளம்வீரரை வாழ்த்திய நிதீஷ் ராணா

“அதே போல செயல்படும் ரிங்கு சிங் அடுத்து நடைபெறும் உலகக் கோப்பையில் லோயர் ஆர்டரில் தம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். மேலும் நல்ல ஃபீல்டராகவும் இருக்கும் அவர் அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டால் அடுத்து வரும் உலக கோப்பைகளில் தாராளமாக இந்திய அணியில் சேர்க்கலாம்” என்று கூறினார்.

Advertisement