வங்கதேசத்தை ஓடவிட்ட தெ.ஆ வீரர் – அதிரடி வெற்றியுடன் டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள்

Quinton De Kock Rilee Rossow
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 22வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அதில் தன்னுடைய முதல் போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் வந்த வங்கதேசத்தை தன்னுடைய முதல் போட்டியில் மழையால் வெற்றியை கோட்டை விட்ட கோபத்துடன் தென்னாபிரிக்கா எதிர்கொண்டது என்றே கூறலாம். ஏனெனில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேசத்தை அடித்து நொறுக்கி 20 ஓவர்களில் 205/5 ரன்கள் விளாசியது.

அந்த அணிக்கு சுமாரான பார்மில் தவிக்கும் கேப்டன் பவுமா முதல் ஓவரிலேயே 2 (6) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார். ஆனால் அடுத்து களமிறங்கிய ரிலீ ரோசவ் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் ஜோடி சேர்ந்து வங்கதேச பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். முதல் ஓவரில் இணைந்த இவர்கள் 15வது ஓவர் வரை சிம்ம சொப்பனமாக நின்று 2வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தென் ஆப்பிரிக்காவை வலுப்படுத்திய போது குயின்டன் டி காக் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 63 (38) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அதிரடி சதம்:
அப்போது களமிறங்கிய திரிஷன் ஸ்டப்ஸ் 7 (7) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரிலீ ரோசவ் சதமடித்து 7 பவுண்டரி 8 சிக்சருடன் 109 (56) ரன்கள் குவித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சுமாராகப் பந்து வீசிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 206 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்காவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 16.3 ஓவரில் வெறும் 101 ரன்களுக்கு சுருண்டது. சாண்டோ 9, சர்கார் 15, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34 (31) ரன்களை எடுத்தார்.

அந்த அளவுக்கு தெறிக்க விடும் வகையில் பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 4 விக்கெட்டுகளையும் தப்ரீஸ் சம்சி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த தென்னாப்பிரிக்கா இந்த உலக கோப்பையில் தன்னுடைய முதல் வெற்றி வெற்றியை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங், பவுலிங் என மொத்தமாக சொதப்பிய வங்கதேசம் மற்றுமொரு மறக்க வேண்டிய மோசமான தோல்வியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்த ரிலீ ரோசவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

1. அதை விட இப்போட்டியில் 109 ரன்கள் குவித்த அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதமடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் வரலாற்றில் ஏபி டிவிலியர்ஸ் உட்பட வேறு எந்த தென் ஆப்பிரிக்க வீரரும் டி20 உலக கோப்பையில் சதமடித்ததில்லை. மேலும் ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதமடித்த 9வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

2. முன்னதாக இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தூரில் நடந்த கடைசி போட்டியிலும் சதமடித்த இவர் 100* (48) ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதன்பின் இந்த உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு பெறாத அவர் இப்போட்டியில் சதமடித்துள்ளார்.

- Advertisement -

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சதமடித்த முதல் வீரர் (முழு அந்தஸ்து பெற்ற நாடுகள்) என்ற புதிய உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் உறுப்பு நாடான பிரான்ஸ் அணிக்காக குஸ்டவ் மெக்கேன் மட்டுமே அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சதமடித்துள்ளார்.

3. அத்துடன் இப்போட்டியில் டீ காக் உடன் இணைந்து 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ஜெயவர்த்தனே – சங்கக்காரா சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : INDvsNED : அப்படி இப்படின்னு சொன்னாங்க கடைசில ரோஹித் எடுத்த முடிவை பாத்தீங்களா? – விவரம் இதோ

அந்த பட்டியல்:
1. குயின்டன் டி காக் – ரிலீ ரோசவ் : 168 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக, 2022*
2. மகிளா ஜெயவர்தனே – குமார் சங்ககாரா : 166, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010

Advertisement