ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அடுத்தடுத்த 2 வெற்றிகளைப் பெற்று அசத்தி வருகிறது. குறிப்பாக லக்னோவுக்கு எதிராக இரண்டாவது போட்டியில் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பஞ்சாப் 171 இலக்கை வெறும் 16.2 ஓவரில் எடுத்து பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
அந்த அணிக்கு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 69 (34) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அதை வீணடிக்காத கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52* (30) ரன்களும் நேஹல் வதேரா 44* ரன்களும் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் தலைமையில் பஞ்சாப் அசத்துவது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ்:
இந்நிலையில் லக்னோவுக்கு எதிரானப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ரோல்ஸ் ராய்ஸ் கார் போல விளையாடி வெற்றி பெற வைத்ததாக பஞ்சாப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோல்ஸ் ராய்ஸ் நாள் முழுவதும் வெறும் மூன்றாவது கியரில் இயங்குவது போல நமது கேப்டன் மீண்டும் அசத்தியுள்ளார். அவர் அதைத் தாண்டி மிகவும் அதில் கடினமாக விளையாடச் செல்லவில்லை”
“அவரது ஆட்டம் கப்பல் நேராக வீட்டுக்குச் செல்வது போல் இருந்தது. அதே சமயம் தற்போது அடுத்தடுத்த வெற்றிகளால் எதையும் கிடைத்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நமது அணுகு முறை கச்சிதமாக இருக்கிறது. நாம் இப்போது தான் தரையை உரசத் துவங்கியுள்ளோம். எனவே ஒரு குடும்பமாக இதே போல தொடர்ந்து கடினமாக வேலை செய்வோம்”
பாண்டிங் பாராட்டு:
“ஒவ்வொரு நாளும் நாம் முன்னேற்றத்தை சந்திப்போம்” எனக் கூறினார். மேலும் அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், கிளன் மேக்ஸ்வெல், மார்கோ யான்சென் ஆகியோர் பவுலிங் துறையில் சிறப்பாக விளையாடியதாகவும் பாண்டிங் பாராட்டினார். அத்துடன் பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா ஆகியோரும் தங்களது வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாண்டிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக சுனில் நரேன் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ
மொத்தத்தில் அடுத்தடுத்த வெற்றிகள் மற்றும் கூடுதல் ரன் ரேட் காரணமாக பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அனைத்து தங்களது அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது. அந்தப் போட்டி ஏப்ரல் 5ஆம் தேதி முள்ளான்பூர் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.



