ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்று சாதனை படைத்தது. குறிப்பாக இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்திய ஆர்சிபி அணி தங்களுடைய முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் ஒரு வழியாக 17 வருடங்கள் கழித்து காத்திருந்து ஐபிஎல் கோப்பையை வென்றார். 2008 முதல் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வெற்றிக்கு போராடினார். அதே போல 2016 சீசனில் 973 ரன்கள் விளாசி வெறித்தனமாக போராடிய அவர் கேப்டனாக பெங்களூரு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று தோல்வியைச் சந்தித்தார்.
விராட் கோலியின் கண்ணீரில்:
அதன் காரணமாக விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு அணி கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன. அதனால் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் தற்போது ரஜத் படிதார் தலைமையில் கோப்பையை வென்ற விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் 18 வருடங்களாக காத்திருந்து கோப்பையை வென்றதால் விராட் கோலி களத்திலேயே தன்னுடைய கைகளை முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்வது சுலபமல்ல என்பது விராட் கோலியின் கண்ணீர் உணர்த்துவதாக ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அந்த கடினமான வெற்றியை சிஎஸ்கே, மும்பை அணிகள் சுலபமாக பெற்றுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
பாண்டிங் பாராட்டு:
பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளரான அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “கடைசி ஓவரில் விராட் கோலியின் கண்கள் கண்ணீர் சிந்துவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதுவே ஐபிஎல் கோப்பை என்றால் வீரர்களுக்கு என்ன? என்பதற்கான அர்த்தம். அதை சென்னை சூப்பர் கிங்ஸ் சில முறைகள் வென்றுள்ளன. அதை மும்பை இந்தியன்ஸ் சில முறைகள் வென்றுள்ளன”
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் செய்த இந்த தப்பை ஏத்துக்கவே முடியாது.. தோல்விக்கு அவரே காரணம் – யோக்ராஜ் சிங் குற்றச்சாட்டு
“ஆனால் அது வெல்வதற்கு எளிதான தொடர் கிடையாது. அதற்காக நீங்கள் நீண்டதாக சிந்தித்து கடினமாக உழைக்க வேண்டும். ஐபிஎல் கோப்பையை வெல்வது எளிதான காரியம் கிடையாது” என்று கூறினார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று தங்களுடைய அலமாரியில் அடுக்கி வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



