
இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் இந்த தொடரானது நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்த அணியில் மீண்டும் கேப்டனாக ஆரோன் பின்ச் நீடிக்கிறார்.
அதேபோன்று அனுபவ வீரர்களான வார்னர், மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டாய்நிஸ், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளது. முக்கிய வீரர்கள் பலரும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி தற்போது பலமான அணியாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெல்லும் வாய்ப்பு உள்ளது என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் அதிரடியாக ரன் குவிக்க கூடியவர்கள், நல்ல ஆல்ரவுண்டர், நல்ல பவுலர்கள் உள்ளதால் நிச்சயம் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன், அது மட்டுமின்றி ஜோஷ் இங்லிஸ் வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.