
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் இரண்டாம் தேதி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. வழக்கம் போல இம்முறையும் இந்திய அணிக்கு விராட் கோலி அதிக ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடுவார் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில் 2014, 2016 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே போல பவுலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
பாண்டிங் கணிப்பு:
எனவே 2022 டி20 உலகக் கோப்பையை காயத்தால் தவறவிட்ட விக்கெட்டுகளை இம்முறை அவர் எடுப்பார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் பும்ரா அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக சாதனை படைப்பார் என்று ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ஆனால் பேட்டிங்கில் விராட் கோலியை விட தங்கள் நாட்டைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் குவித்து சாதனை படைப்பார் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போகும் என்னுடைய வீரர் ஜஸ்பிரித் பும்ரா. அற்புதமாக செயல்படக்கூடிய அவர் கடந்த பல வருடங்களாக பங்காற்றி வருகிறார். ஐபிஎல் தொடரில் அற்புதமாக செயல்பட்ட பின் அவர் இங்கே வருகிறார். புதிய பந்தில் அவரால் ஸ்விங் செய்து வேகமாக வீச முடியும்”
“ஐபிஎல் தொடரின் முடிவில் அவருடைய எக்கனாமி ரேட் ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கு குறைவாகும். நிறைய கடினமான ஓவர்களை வீசக்கூடிய அவர் நிறைய விக்கெட்டுகளை எடுப்பார். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் கடினமான ஓவர்களை வீசும் போது விக்கெட்டுகள் உங்கள் வழியில் வரும். என்னுடைய அதிக ரன்கள் அடிக்கப்போகும் வீரர் ட்ராவிஸ் ஹெட். டெஸ்ட் அல்லது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக உயர்தரத்தில் அவர் செய்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன்”
இதையும் படிங்க: அவங்ககிட்ட வீக்னெஸ் இருக்கு.. இந்த ரிஸ்க் எடுக்கும் இந்தியா டி20 உ.கோ ஜெய்ப்பாங்க.. மைக்கேல் கிளார்க்
“பயமற்ற கிரிக்கெட்டை விளையாடக்கூடிய அவருக்கு ஐபிஎல் தொடர் மேடு பள்ளமாக இருந்தாலும் நன்றாக இருக்கும் போது அணிக்காக அற்புதங்களை செய்வார். தொடர்ச்சியாக அடிக்காவிட்டாலும் அவர் அதிக ரன்கள் அடிக்கக்கூடியவராக இருப்பார். அதிக நேரத்தை செலவிட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு நிறைய போட்டிகளை வென்று கொடுப்பார்” என்று கூறினார்.