பைனலில் ஆட்டநாயகன் விருது – ஒரே குடும்பத்தில் இருந்து 2 அண்டர் 19 சாம்பியன்கள் ! யார் அவர்கள்?

Bawa
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்துள்ள ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த இளம் ஹீரோக்களை கண்டறியும் உலக கோப்பையில் லீக் சுற்று முதல் பைனல் வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்த உலகக் கோப்பையை வெற்றி பெற்றிருந்த இந்தியா தற்போது 5வது முறையாக இந்த உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளது. இதன் வாயிலாக ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

கலக்கிய ராஜ் பாவா:
இந்த உலக கோப்பையில் ஆண்டிகுவா நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதன் வாயிலாக அண்டர் 19 உலககோப்பை வரலாற்றின் பைனலில் 5 விக்கெட் ஹால் பதிவு செய்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சரித்திரத்தையும் அவர் எழுதினார்.

அது மட்டுமல்லாமல் அதன் பின் இங்கிலாந்து நிர்ணயித்த 190 ரன்களை இந்தியா சேசிங் செய்தபோது 54 பந்துகளில் முக்கியமான 35 ரன்களை எடுத்து இந்த இறுதிப் போட்டியில் ஒரு ஆல்-ரவுண்டராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார். இதன் வாயிலாக ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 பைனலின் ஆட்டநாயகன் விருதையும் வென்று அவர் அசத்தினார். இது மட்டுமல்லாமல் இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் உகண்டா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய இவர் 162 விளாசி “ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர்” என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

ஒரே குடும்பத்தில் இருவர்:
இத்துடன் இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் பங்கேற்ற இவர் 9 விக்கெட்டுகளையும் 252 ரன்களையும் குவித்து வருங்காலத்தில் இந்திய அணிக்கு ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக விளையாட தகுதியானவராக காட்சி அளிக்கிறார். இதன் காரணமாக விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இவரை பெரிய தொகைக்கு வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு சாதனைகளையும் செய்துள்ள ராஜ் பாவா இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரீதிந்தர் சோதியின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலககோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.

ரிதீந்தர் சோதி:
அந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவிற்கு ரிதீந்தர் சோதி 43 பந்துகளில் முக்கியமான 39 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். எனவே இந்தியா வென்ற முதல் அண்டர் 19 உலக கோப்பையின் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்று அசத்தினார்.

தற்போது அவரின் வழியில் ராஜ் பாவா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது பற்றி ரிதீந்தர் சோதி தனது ட்விட்டரில் கூறியது பின்வருமாறு. “22 வருடங்களுக்கு முன்பு நீங்கள் செய்ததை தற்போது உங்கள் சாச்சாவின் மகன் செய்துள்ளது ஒரு மிகச்சிறப்பான உணர்வை அளிக்கிறது. ஒரே குடும்பத்தில் இருந்து 2 உலககோப்பையின் பைனல் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்’ என பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement