இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. அதில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததற்கு உச்சகட்ட எதிர்ப்புகள் காணப்படுகிறது. அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தியது ரசிகர்களை கோபமடைய வைத்தது.
வினோத தண்டனை:
அதனால் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தங்களுடைய சொந்த கேப்டன் என்றும் பாராமல் மும்பை ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்ட வினோத சம்பவமும் அரங்கேறியது. அந்த சூழ்நிலையில் அப்போட்டியை முடித்துக் கொண்டு அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை அணியினர் விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது மும்பை வீரர் இசான் கிசான் சூப்பர்மேன் உடையை அணிந்து வந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் “வெயில் காலத்தில் இது என்னப்பா, புது ட்ரெண்டா இருக்கு. இதை பார்க்கும் போது சூப்பர்மேன் போல இல்லை கோமாளியை போல் இருக்கிறது” என்று சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். இந்நிலையில் அணியின் மீட்டிங்கிற்கு தாமதமாக வரும் வீரர்களுக்குத் தான் இப்படி சூப்பர்மேன் ஆடையை அணியும் தண்டனையை கொடுத்திருப்பதாக மும்பை நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அந்த வரிசையில் இசான் கிசான், குமார் கார்த்திகேயா ஆகியோருடன் இலங்கை வீரர் நுவான் துஷாராவும் அணி மீட்டிங்கிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. அதனாலயே அந்த மூவருக்கும் சூப்பர்மேன் ஆடையை அணிய வைத்து தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக மும்பை நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய நாடு திரும்பிய முஷ்டபிசுர் ரஹ்மான் – காரணம் என்ன? விவரம் இதோ
அந்த வீடியோவில் மற்றொரு மும்பை வீரர் நமன் திர் “இதை தவிர்ப்பதற்காகவே நான் எப்போதும் அணி மீட்டிங்க்கு தாமதமாக செல்ல மாட்டேன்” என்று சொல்லி இசான் கிசான் போன்ற வீரர்களை கலாய்த்துள்ளார். சொல்லப்போனால் 2018 சீசனிலேயே மும்பை நிர்வாகம் இந்த தண்டனையை இசான் கிசான், ராகுல் சஹர், அங்குல் ராய் ஆகியோருக்கு கொடுத்தது. மொத்தத்தில் நேரத்தை கடைபிடிப்பதற்காக மும்பை நிர்வாகம் கொடுக்கும் இந்த தண்டனை ரசிகர்களிடம் சிரிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.