உங்களத்தான் நம்பி இருக்கோம், கை விட்றாதீங்க ! மும்பைக்கு ஆர்சிபி கேப்டன், விராட் – ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற 67-ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் 1 (4) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மேத்யூ வேட் 16 (13) ரன்களில் நடையை கட்டினார். அந்த சமயம் அதிரடி காட்டிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹாவும் 31 (22) ரன்களில் ரன் அவுட்டானார்.

அதனால் 62/3 என தடுமாறிய அந்த அணிக்கு நங்கூரமாக நின்று தூக்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்க்க அவருக்கு கை கொடுத்த டேவிட் மில்லர் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 34 (25) ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அடுத்து வந்த ராகுல் திவாடியா 2 (2) ரன்களில் ஆட்டமிழந்தாலும் கடைசிவரை நின்ற பாண்டியா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 62* (47) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் வெறும் 6 பந்தில் 19* ரன்களை குவித்த ரசித் கான் சிறப்பான பினிஷிங் கொடுத்தார். பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு பார்மின்றி தவிக்கும் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டுப்லஸ்ஸிஸ் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 15 ஓவர்கள் வரை தரமான பவுலர்களை கொண்ட குஜராத்தை அற்புதமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 115 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்தது. இதில் டுப்லஸ்ஸிஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (54) ரன்கள் எடுத்த விராட் கோலி ஓரளவு நல்ல பார்முக்கு திரும்பி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் கடைசி நேரத்தில் களமிறங்கி 5 பவுண்டரி 2 சிக்சர்களை பட்டாசாக அடித்த கிளன் மேக்ஸ்வெல் 40* (18) ரன்களுடன் சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 18.4 ஓவர்களில் 170/2 ரன்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் ரஷித் கான் மட்டும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் தோல்வி அடைந்தாலும் ஏற்கனவே 10 வெற்றிகளை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற குஜராத் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அணியாக லீக் சுற்றை முடிவு செய்து அசத்தியது.

- Advertisement -

டெல்லியின் கையில்:
மறுபுறம் வாழ்வா – சாவா என்பது போல் அமைந்த இப்போட்டியில் வாழ்வை கண்ட பெங்களூரு பங்கேற்ற 14 போட்டிகளில் 8 வெற்றி 6 தோல்விகளை பதிவுசெய்து புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் டெல்லியை முந்தி 4-வது இடத்திற்கு முன்னேறியது. ஆனாலும் அந்த அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

1. ஏனெனில் முதல் 2 அணிகளாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் 3-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் சென்னைக்கு எதிரான இன்றைய தனது கடைசி போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

2. மேலும் 5-வது இடத்தில் 16 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் டெல்லியை விட அதே 16 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு குறைவான ரன்ரேட் கொண்டுள்ளது. அத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் பெங்களூருவை விட அதிகமான ரன்ரேட் கொண்டுள்ளது. எனவே வரும் மே 21இல் மும்பை – டெல்லி ஆகிய அணிகள் மோதும் போட்டியில் டெல்லியை மும்பை தோற்கடித்தால் மட்டுமே பெங்களூரு பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

3. அத்துடன் நேற்று பெங்களூரு வென்றதால் 7, 8 ஆகிய இடங்களில் தவித்த ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகளும் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகளைத் தொடர்ந்து 4 மற்றும் 5-வது அணிகளாக அதிகாரப்பூர்வமாக வெளியேறின.

- Advertisement -

கை விட்றாதீங்க:
இதனால் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை, மும்பை.. என்று ரசிகனை போல ஆதரவளிக்க உள்ளதாக பெங்களூரு கேப்டன் டுப்லஸ்ஸிஸ் சிரித்துக்கொண்டே நேற்றைய போட்டி முடிந்த பின் பேசினார். அதேபோல் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் உள்ள வீரர்களுடன் சேர்த்து எக்ஸ்ட்ராவாக 25 வீரர்கள் (பெங்களூரு வீரர்கள்) ஆதரவளிக்க உள்ளதாக விராட் கோலியும் ஜாலியாக சிரித்து கொண்டே மும்பையின் ஆதரவை வெளிப்படையாகவே கேட்டார்.

இதையும் படிங்க : சர்ச்சையான விக்கெட். கோபத்தால் ஹெல்மட், பேட்டை அடித்து நொறுக்கிய ஆஸி வீரர் – வைரல் வீடியோ

இது மட்டுமல்லாமல் “முதல் கோப்பையை வெல்ல உங்களைத்தான் நம்பியிருக்கும் கை விட்றாதீங்க, எப்படியாச்சும் ஜெயிச்சுடுங்க” என்பது போல் சமூக வலைதளங்களில் அனைத்து பெங்களூரு ரசிகர்களும் மும்பைக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement