ஆபத்தில் தங்கமாய் இருக்காரு ! வலியுடன் ஆர்சிபி வெற்றிக்கு பங்காற்றிய இந்திய பவுலரை பாராட்டும் டு பிளேஸிஸ்

Harshal Patel vs LSG
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா என்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த லக்னோவை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 207/4 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 0 (1) விராட் கோலி 25 (24) கிளன் மேக்ஸ்வெல் 9 (10) மஹிபால் லோம்ரோர் 14 (9) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

patidar 1

- Advertisement -

ஆனாலும் மறுபுறம் முதல் ஓவேரிலேயே 3-வது இடத்தில் களமிறங்கி லக்னோ பவுலர்களை பிரித்து மேய்ந்து சக்கை போடு போட்ட இளம் வீரர் ரஜத் படிடார் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசினார். கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அவருக்கு உறுதுணையாக தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு அதிரடியாக 37* (23) ரன்கள் எடுத்து சிறப்பான பினிஷிங் கொடுத்தார்.

லக்னோ தோல்வி:
அதை தொடர்ந்து 208 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டீ காக் 6 (5) மன்னன் வோஹ்ரா 19 (11) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 41/2 என தடுமாறிய அந்த அணிக்கு ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் கேஎல் ராகுல் – தீபக் ஹூடா ஆகியோர் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். இதில் தீபக் ஹூடா 45 (26) ரன்களில் ஆட்டமிழந்த பின் வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் 9 (9) ரன்களில் அவுட்டான நிலையில் 19-வது ஓவரில் ஃபினிஷிங் செய்ய வேண்டிய கேஎல் ராகுல் 79 (58) ரன்களில் ஆட்டமிழந்ததால் போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது.

Mohammed Siraj De Kock

அந்த சமயத்தில் வந்த க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதால் 20 ஓவர்களில் 193/6 ரன்களை மட்டுமே எடுத்த லக்னோ பரிதாபமாக தோற்று ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த வெற்றிக்கு 112 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரஜத் படிடார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் 3 விக்கெட்டுகளை எடுத்த ஹேசல்வுட் உட்பட எஞ்சிய அனைத்து பெங்களூரு பவுலர்களை காட்டிலும் 4 ஓவர்களில் 1 விக்கெட் உட்பட 25 ரன்களை கொடுத்து வெறும் 6.25 என்ற எக்கனாமியில் அட்டகாசமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

கலக்கிய ஹர்ஷல்:
ஏனெனில் இப்போட்டிக்கு முன்பாக லீக் தொடரின் இறுதியில் காயமடைந்த அவர் அதையும் பொருட்படுத்தாமல் இந்த முக்கியமான நாக் அவுட் போட்டியில் வலி நிவாரணியை எடுத்துக்கொண்டு லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 3 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் ஃபினிசிங் செய்வதற்காக கேஎல் போராடிக் கொண்டிருந்தார். அப்போது 18-வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட் உட்பட வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து துல்லியமாக பந்து வீசியதால் பெங்களூரு சிறப்பான வெற்றி பெற்றது. அதிலும் போட்டி முடிந்த பின் பந்து வீசியதால் ஏற்பட்ட வலியின் காரணத்தால் இடது கையை பயன்படுத்தி இதர வீரர்களுக்கு கைகொடுத்தார்.

கடந்த வருடம் வெறும் 20 லட்சத்துக்காக விளையாடிய அவர் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்றதன் வாயிலாக இந்திய அணிக்காகவும் விளையாடி அசத்தினார். அதனால் இந்த வருடம் 10.75 என்ற பெரிய தொகைக்கு பெங்களூரு மீண்டும் அவரை போட்டி போட்டு வாங்கிய நிலையில் பங்கேற்ற 14 போட்டிகளில் 19* விக்கெட்டுகளை 7.57 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து வரும் அவர் கடந்த வருடங்களை விட இம்முறை துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து சிறந்த டெத் பவுலராக வலம் வருகிறார்.

இதையும் படிங்க : ப்ளே ஆஃப் ஏன் போகல ! வீடு திரும்பியதும் நட்சத்திர வீரருக்கு அடி, உதை கொடுத்த ஸ்ட்ரிக்டான தந்தை – வைரல் வீடியோ

தங்கமாய்:
இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் பேசியது பின்வருமாறு. “ஹர்ஷல் படேல் எங்களது அணியின் சீட்டுக்கட்டில் ஜோக்கர் போன்றவர். கேப்டனாக எனக்கு அழுத்தம் ஏற்படும்போது பந்து வீச அந்த ஸ்பெஷல் பவுலரை உபயோகிக்கிறேன். கடைசி நேரத்தில் முக்கிய ஓவர்களை சிறப்பாக வீசிய அவர் போட்டியை எங்கள் பக்கம் மாற்றினார்” என கூறினார். மேலும் லேசான வலி இருந்தாலும் அணிக்காக 24 பந்துகளை வீசி வெற்றிக்கு பங்காற்றியதில் மிகவும் மகிழ்ச்சி என்று போட்டி முடிந்த பின் ஹர்ஷல் படேல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement