ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பெங்களூருவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தடுமாற்றமாக விளையாடத் துவங்கிய பில் சால்ட் 26 (23) ரன்னில் ஹஸரங்கா சுழலில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானம் கடந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த தேவ்தூத் படிக்கல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பாரினர் அமைத்த அந்த ஜோடியில் விராட் கோலி அரை சதத்தை அடித்து 70 (42) ரன்கள் எடுத்த போது ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
பெங்களூரு அசத்தல்:
அவருடன் சேர்ந்து விளையாடிய படிக்கல் அரை சதத்தை அடித்த போது 50 ரன்னில் சந்திப் சர்மா வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ரஜத் படிதார் 1 ரன்னில் சந்தீப் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 23 (15) ரன்களை விளாசி மிரட்டினார்.
அவருடன் சேர்ந்து அசத்திய ஜித்தேஷ் சர்மா 20* (10) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு அணி 205-5 ரன்கள் அடித்து அசத்திய நிலையில் ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 206 ரன்களை துரத்தி வருகிறது.
கிங் கோலியின் சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த அரை சதத்தையும் சேர்த்து விராட் கோலி தம்முடைய டி20 கேரியரில் 111 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதாவது உள்ளூர், இந்தியா மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் அவர் 111 முறை 50+ ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 2வது அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு வீரரை எப்படி விட்டாங்கனு தெரியல.. அதுதான் ராஜஸ்தான் செய்த மிகப்பெரிய தப்பு – அணில் கும்ப்ளே கருத்து
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 110 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதே பட்டியலில் டேவிட் வார்னர் இப்போது முதல் இடத்தில் இருக்கிறார். அந்தப் பட்டியல்:
1. டேவிட் வார்னர்: 117
2. விராட் கோலி: 111*
3. கிறிஸ் கெய்ல்: 110
4. பாபர் அசாம்: 101
5. ஜோஸ் பட்லர்: 95



