WPL 2023 : அசத்திய குஜராத் – ஆடவர் அணியை மிஞ்சி வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மகளிர் ஆர்சிபி அணி

Womens IPL 2
- Advertisement -

கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 மகளிர் ஐபிஎல் தொடரில் மார்ச் 8ஆம் தேதியன்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. தங்களது முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விளை சந்தித்த இந்த இரு அணிகளுமே நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இப்போட்டி இரவு 7.30 மணிக்கு மும்பையில் இருக்கும் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் 201/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு மேக்னா 8 (11) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீராங்கனை சோபியா டுங்லி அடுத்து வந்த ஹர்லிண் தியோலுடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

2வது விக்கெட்டுக்கு சரவெடியாக செயல்பட்டு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் சோபியா டுங்லி 11 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (28) ரன்கள் எடுத்து அவுட்டானார் அப்போது வந்த அஸ்லே கார்ட்னர் 19 (15) ஹேமலதா 16 (17) சதர்லேண்ட் 14 (8) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய ஹர்லின் தியோல் 9 பவுண்டரி 1 சிக்ருடன் அரை சதமடித்து 67 (45) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார்.

- Advertisement -

பரிதாப ஆர்சிபி:
பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஹீதர் நைட் மற்றும் ஸ்ரேயங்கா பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 202 என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் 3 பவுண்டரியுடன் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 18 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டேவினுடன் அடுத்து வந்த எலிஸ் பெரி கைகோர்த்து அதிரடியாக ரன்களை குவித்தார். ஆனாலும் ரன் ரேட் எகிறியதால் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளிக்க முயன்ற எலிஸ் பெரி 5 பவுண்டரியுடன் 32 (25) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரிச்சா கோஸ் 10 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார் போதாக்குறைக்கு மறுபுறம் வெற்றிக்கு போராடிய சோபி டேவின் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 66 (45) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்த போது வந்த கனிகா அகுஜாவும் 10 (7) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இறுதியில் ஹீதர் நைட் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சருடன் 30* (11) ரன்கள் எடுத்தும் எதிர்ப்புறம் கை கொடுக்க வீராங்கனைகள் இல்லாததால் 20 ஓவர்களில் பெங்களூரு 190/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக அஸ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற குஜராத் முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்துள்ளது.

மறுபுறம் ஸ்ம்ரிதி மந்தனா, எலிஸ் பெரி, சோபி டேவின் போன்ற நம்பிக்கை நட்சத்திர வீராங்கனைகளை வாங்கியதால் ஆடவர் தொடரை விட மகளிர் தொடரில் முதல் முறையாக கோப்பையை வெல்லப் போவதாக ஏலத்தின் போதே பெங்களூரு ரசிகர்கள் கெத்தாக பேசினார்கள். ஆனால் பேட்டிங் துறையில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் ஆடவர் ஐபிஎல் போலவே ரன் மெஷின்களாக நிறைய வீராங்கனைகள் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குவதால் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே பெங்களூரு மகளிர் அணி ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஆடவர் அணி கூட 2008 முதல் சீசனில் முதல் 3 போட்டிகளில் தோற்கவில்லை. ஆனால் அதை மிஞ்சியுள்ள மகளிர் அணி முதல் சீசனிலேயே ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்துள்ளது. மேலும் ஆடவர் – மகளிர் என மொத்தமாக 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி ஆரம்பத்திலேயே ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை ஈஸியா சாமாளிச்சிடுவேன் – தெனாவட்டாக பேசிய ஆஸி வீரர்

அதனால் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் திண்டாடும் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆடவர் அணியை போலவே தங்களது மகளிரணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கூறுகளை அறிய ஆர்சிபி ரசிகர்கள் இப்போதே கால்குலேட்டரை கையிலெடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement