தரம்சாலா நகரில் இன்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆர்.சி.பி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
பிளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்த ஆர்.சி.பி :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 73 ரன்களையும், விராட் கோலி 58 ரன்களையும் குவித்தனர். பஞ்சாப் அணி சார்பாக ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதனை தொடர்ந்து 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 56 ரன்களையும், கூப்பர் கோனாலி மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 37 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி மூலம் ஆர்.சி.பி அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 13 போட்டிகளில் ஒன்பதாவது வெற்றியை பெற்று 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று நடப்பு சாம்பியனாக இந்து தொடரில் பங்கேற்ற ஆர்.சி.பி அணி ஆரம்ப கட்ட போட்டிகளில் இருந்து பலம் வாய்ந்த அணியாக வெற்றிகளை குவித்து வந்தது.
இதையும் படிங்க : பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ரஜத் பட்டிதார் விளையாடாதது ஏன்? – காரணம் இதோ
இவ்வேளையில் தற்போதைய நிலையில் கடைசி லீக் போட்டி எஞ்சியுள்ள வேலையிலேயே முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளதால் முதல் இரண்டு இடங்களில் லீக் சுற்றுப்போட்டிகளை முடிக்க ஆர்.சி.பி அணிக்கு மகத்தான வாய்ப்பு காத்திருக்கிறது.



