ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக கொல்கத்தா நகரில் துவங்கியது. இந்த வருடம் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவரில் 174-8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டீ காக் 4 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் ரஹானே 56, சுனில் நரேன் 44 ரன்கள் எடுத்ததால் 10 ஓவரில் கொல்கத்தா 107/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்றது. அதன் காரணமாக 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர் 6, ஆண்ட்ரே ரசல் 4, ரிங்கு சிங் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
பெங்களூரு அசத்தல்:
இறுதியில் ரகுவன்சி 30 (22) ரன்கள் எடுத்தும் கொல்கத்தாவை 200 ரன்கள் தொட விடாமல் மடக்கிய பெங்களூருவுக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3, ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்த களம் இறங்கிய கொல்கத்தாவுக்கு பிலிப்ஸ் சால்ட் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 4, 6, 4, 4 என அடித்து நொறுக்கிய அவர் வேகமாக ரன்கள் குவித்தார்.
அவருடன் சேர்ந்து விராட் கோலி தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 8.3 ஓவரில் 95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்த அந்த ஜோடியில் சால்ட் அரை சதத்தை அடித்து 56 (31) ரன்னில் வருண் சக்கரவர்த்தியிடமே அவுட்டானார். அடுத்து வந்த படிக்கல் 10 ரன்னில் நரேன் சுழலில் அவுட்டானாலும் விராட் கோலி நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.
3 வருட வெற்றி:
அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ரஜத் படித்தார் அதிரடியாக 34 (16) ரன்கள் எடுத்து ஃபெவிலியன் திரும்பினார். இறுதியில் லிவிங்ஸ்டன் 15* (5), விராட் கோலி 59* (36) ரன்கள் எடுத்ததால் 16.2 ஓவரிலேயே 177-3 ரன்களை எடுத்த பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் இந்த தொடரில் தங்களது முதல் கோப்பையை வெல்லும் பயணத்தை பெங்களூரு வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியை வீழ்த்த.. அவரை வெச்சு இந்திய அணி டெம்ப்ளேட் யூஸ் பண்ணுவேன்.. சூரியகுமார் பேட்டி
மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து பெங்களூரு ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக 2022இல் வென்ற பெங்களூரு அதன்பின் சந்தித்து வந்த 4 தொடர் தோல்விகளை இன்று நிறுத்தி கம்பேக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி ஆர்சிபி ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.



