
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் தொடர்ச்சியாக தோற்று வந்த அந்த அணி மிகப்பெரிய விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி கோப்பையை வென்று தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதே போல விராட் கோலி 17 வருடங்கள் காத்திருந்து ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாளுக்கு மேல் நீடிக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் 17 வருடங்கள் காத்திருந்து வென்ற வெற்றியை ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தங்களுடைய ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்தது.
அதை அறிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்தனர். ஆனால் மைதானத்தில் குறிப்பிட்ட அளவு ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயற்சித்ததால் நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறிய அந்த நெரிசலில் 11 ரசிகர்கள் இயற்கை எய்தினார்கள்.
அந்த வகையில் ஆர்சிபி கோப்பையை வென்றது மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியது. இருப்பினும் தங்களுடைய ரசிகர்களுக்கு ஆதரவாக நின்ற ஆர்சிபி அணி நிர்வாகம் உயிரை இழந்த 11 பேருக்கும் தலா 10 லட்சம் நிவாரணமாக அறிவித்திருந்தது. அதன் பின் 3 மாதங்களாக ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் இடவில்லை.
இந்நிலையில் வெற்றி கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசலில் உயிரை இழந்த 11 ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்துக்கு எக்ஸ்ட்ராவாக 25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 11 ரசிகர்களுக்கு சேர்த்து 2.75 கோடிகளை நிவாரணமாக வழங்க உள்ளது குறித்து அந்த அணி அறிவித்துள்ளது பின்வருமாறு. “அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எந்த ஆதரவும் நிரப்ப முடியாது”
இதையும் படிங்க: அந்த 2 கோப்பை மாதிரி ரோஹித்தும், கோலியும் இந்த கோப்பையையும் ஜெய்க்கனும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்
“2025 ஜூன் 4இல் எங்களுடைய இதயங்கள் உடைந்தன. நாங்கள் ஆர்சிபி குடும்பத்தின் 11 உறுப்பினர்களை இழந்தோம். அவர்கள் எங்கள் அணி, நகரம், சமூகத்தில் ஒரு அங்கமாக இருந்தார்கள். அவர்கள் இல்லாதது எங்களுடைய நினைவுகளில் எதிரொலிக்கும். ஆனால் முதல் கட்டமாக ஆழ்ந்த மரியாதையுடன் ஆர்சிபி அணி அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்கியுள்ளது. இது ஆர்சிபி கேர்ஸ் திட்டத்தின் துவக்கமாகவும் அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.