பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்க அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று தோற்றது பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய வரலாற்று தோல்வியாக அமைந்தது.
அதோடு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் இந்திய அணியை 119 ரன்களுக்கு சுருட்டினாலும் 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கினை துரத்த முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.
இப்படி பாகிஸ்தான் அணி வீரர்களின் சொதப்பலான ஆட்டம் அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது இருக்கும் நிலையில் கனடா அணிக்கு எதிராக கூட வெற்றிபெற வாய்ப்பு இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அவமதிக்கவில்லை ஆனால் அடுத்தடுத்து பாகிஸ்தான் அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கையில் அவர்கள் கனடா அணிக்கு எதிராக கூட தோல்வியை சந்திப்பார்கள்.
ஏனெனில் தற்போதைய பாகிஸ்தான் அணியை பார்க்கும்போது எந்த அணியாலும் அவர்களை எளிதாக வீழ்த்த முடியும் என்று தெரிகிறது. ஏனெனில் இந்திய அணிக்கு எதிராக 120 ரன்களை கூட சேட்டிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி அமெரிக்க அணிக்கு எதிராக 159 ரன்களை வைத்து அவர்களை சுருட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : அவமானமா இல்லையா? நீங்க கில்கிறிஸ்ட், ஹைடன் கிடையாது.. பேசாம ரிட்டையராகிடுங்க.. வங்கதேச வீரரை விளாசிய சேவாக்
இப்படி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் எந்த ஒரு உத்வேகத்தையும் காண்பிக்காத பாகிஸ்தான் வீரர்கள் ஒற்றுமையாக விளையாடவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. எனவே தான் சிறிய அணிகளிடம் கூட பாகிஸ்தான் அணி தற்போதைய நிலையில் தோல்வியை சந்திக்கும் என்று கூறுவதாக ராயுடு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.