வீடியோ : மாயாஜால சுழலால் ஆஸ்திரேலியாவை மடக்கிய ரவீந்திர ஜடேஜா – மாஸ் கம்பேக், விமர்சனங்களுக்கு பதிலடி

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் 4 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அதற்கு சவால் கொடுக்க வந்துள்ள ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களில் தங்களை வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ஆனால் களமிறங்குவதற்கு முன்பாகவே வேண்டுமென்றே இந்தியா வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான மைதானம் அமைக்கப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலியா விமர்சித்தது.

அதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தக்க பதிலடி கொடுத்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ஆரம்பத்திலேயே ரன்களை குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்த முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய தொடக்க வீரர்களை தலா 1 ரன்களுக்கு அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்து மிரட்டினர்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
அதனால் 2/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொரு அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாக நின்று சரிவை சரி செய்ய போராடினார். குறிப்பாக அஸ்வின், அக்சர் படேல் போன்ற தரமான ஸ்பின்னர்களுக்கு வளைந்து கொடுக்காமல் தனது தரத்தை நிரூபித்த அவர் 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய சவாலை கொடுத்தது அரை சதத்தை நெருங்கினார்.

ஆனால் தொடர்ந்து கச்சிதமான லைனை பின்பற்றி வந்த ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரியுடன் 49 (124) ரன்களில் அவரை தனது மாயாஜால சுழலால் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கி அடுத்து வந்த மாட் ரென்ஸாவை டக் அவுட் செய்தார். அதோடு நிற்காமல் மறுபுறம் சவாலாக மாறிய ஸ்டீவ் ஸ்மித்தையும் 37 (107) ரன்களில் போல்ட்டாக்கிய அவர் சவாலை கொடுக்க முயற்சித்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை 31 (84) ரன்களில் காலி செய்தார். இடையே ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து 7 பவுண்டரியுடன் 36 (33) ரன்கள் குவித்து மிரட்டலை கொடுத்த அலெக்ஸ் கேரி அஸ்வின் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

இறுதியில் முர்பி 0, ஸ்காட் போலாண்ட் 1 என டெயில் எண்டர்களையும் சேதாரம் செய்ய விடாமல் காலி செய்த ஜடேஜா 22 ஓவரில் 8 மெய்டன் உட்பட 47 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவரது அபாரமான சுழலால் ஒரு கட்டத்தில் 82/2 என சவாலை கொடுத்த ஆஸ்திரேலியா வெறும் 177 ரன்களுக்கு பெட்டி பாம்பாக அடங்கியது. அவருடன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். முன்னதாக கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உருவடுத்த ரவீந்திர ஜடேஜா 2022 ஆசிய கோப்பையில் காயமடைந்து டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை.

அவர் இல்லாதது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த நிலையில் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரவீந்திர ஜடேஜா முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குஜராத் தேர்தலில் தனது மனைவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ இந்தியாவுக்கு விளையாடுவதற்கு முன்பாக பார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை நிரூபிப்பதற்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு நிபந்தனை விதித்தது.

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவிற்கு அறிமுக வாய்ப்பினை வழங்கியது ஏன்? போட்டிக்கு முன்னரே விளக்கத்தை சொன்ன – ரோஹித் சர்மா

அதில் சென்னையில் நடைபெற்ற தமிழகத்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்களை சாய்த்து தனது தரத்தை நிரூபித்த ஜடேஜா இத்தொடரின் முதல் போட்டியில் தேர்வாகி 5 விக்கெட்டுகளை எடுத்து அற்புதமான கம்பேக் கொடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் லபஸ்ஷேன், நம்பர் 2 பேட்ஸ்மேன் ஸ்மித் ஆகியோரை காலி செய்து தன்னை உலகின் நம்பர் ஒன் என்பதையும் நிரூபித்துள்ளார். இதையடுத்து சுழலுக்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் இந்தியா கவனத்துடன் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement