இடத்தை மாத்துங்க, மீண்டும் முக்கிய கேட்ச்சை தவறவிட்ட விராட் கோலி – ரசிகர்கள் கோபம்

Catch
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்கியது. கடந்த 10 வருடங்களாக சொந்த மண்ணில் உலகில் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இத்தொடரிலும் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ஆனால் அதற்கு சவால் கொடுக்க வந்துள்ள ஆஸ்திரேலியா வேண்டுமென்றே இந்தியா வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாதமாக விமர்சித்து வருகிறது.

அதற்கு கடந்த மாதம் காபாவில் பச்சை புற்களுடன் கூடிய மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை 2 நாட்களில் தோற்கடித்த நீங்கள் இந்தியாவை பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். அப்படி ஆரம்பத்திலேயே அனல் பறந்த விவாதங்களுடன் நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு இந்திய ஸ்பின்னர்கள் சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இடத்தை மாத்துங்க:
ஆனால் 2வது ஓவரிலேயே உஸ்மான் கவஜாவை முகமது சிராஜ் எல்பிடபிள்யூ செய்த நிலையில் அடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஸ்டம்ப்களை தெறிக்க விட்டு முகமது ஷமி கிளீன் போல்டாக்கினார். அதனால் 2/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொரு அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து சரிவை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் நங்கூரத்தை போட்ட இந்த ஜோடி அஷ்வின், ஜடேஜா போன்ற இந்திய ஸ்பின்னர்களுக்கு வளைந்து கொடுக்காமல் நிலைத்து நின்று சவாலை கொடுத்தது.

குறிப்பாக 3வது விக்கெட்டுக்கு உணவு இடைவெளியை கடந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 8 பவுண்டரியுடன் அரை சதத்தை நெருங்கிய லபுஸ்ஷேன் ஜடேஜாவின் சுழலில் 49 (123) ரன்களில் ஸ்டம்பிங் ஆகி சென்றார். அடுத்து வந்த மாட் ரென்ஷா’வையும் டக் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்தியாவை இப்போட்டியில் முன்னிலைப்படுத்தியுள்ளார். இருப்பினும் மறுபுறம் தனது அனுபவத்தை காட்டி வரும் ஸ்டீவ் ஸ்மித் வெறும் 6 ரன்களில் இருந்த போது அக்சர் படேல் வீசிய ஓவரில் எட்ஜ் கொடுத்தார்.

- Advertisement -

அதைப் பிடிப்பதற்காகவே முதல் ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி வேகமாக வந்த பந்தை பிடிக்காமல் விட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் ஸ்மித் போன்ற வீரர் கொடுக்கும் இது போன்ற வாய்ப்பை நழுவ விட்டால் பின்னர் வெற்றியை பறிக்கும் அளவுக்கு பெரிய ரன்களை குவித்து வருத்தப்பட வைக்கும் திறமை கொண்டவர். நல்ல வேளையாக அவரை ஜடேஜா 37 (107) ரன்களில் அவுட்டாக்கினார்.

அத்துடன் என்ன தான் அந்த சமயத்தில் பந்து வேகமாக வந்தாலும் முதல் ஸ்லீப் பகுதியில் அப்படி தான் வரும் என்பதையும் அதற்கு தகுந்தார் போல் பயிற்சி எடுத்த வீரர்களைத் தான் அந்த இடத்தில் நிறுத்துவார்கள் என்பதையும் உலகமே அறியும். அந்த வகையில் அந்த இடத்தில் மிகச் சிறந்த பீல்டரான விராட் கோலி நிற்பதற்கு தகுதியானவர் என்றாலும் இது போன்ற கேட்ச்களை கோட்டை விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : இது தான்’யா அம்மா பாசம், அம்மாவின் ஆசிர்வாதத்துடன் அபார ஸ்டம்பிங் செய்த கேஎஸ் பரத்

குறிப்பாக கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் லிட்டன் தாஸ் கொடுத்த ஒன்றுக்கு 3 கேட்சுகளை அவர் தவற விட்டது இறுதியில் எளிதாக பெற வேண்டிய வெற்றியை அஷ்வின் – ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் போராடி பெற வேண்டியதாக மாறியது. ஆனால் மீண்டும் இப்படி கேட்ச்சை அவர் கோட்டை விடுவதால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் பேசாமல் முதல் ஸ்லிப் பகுதியில் தற்போதைக்கு வேறு வீரரை நிறுத்துமாறு சமூக வலை தளங்களில் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement