கேப்டனானதும் பேட்டில் ரன் வரவில்லை, கேப்டன்ஷிப் பிரஷர் காரணமா? நேரடியாக பதிலளித்த ஜடேஜா

Jadeja-1
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடந்த 11-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை பதம்பார்த்த பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180/8 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக பேட்டிங் செய்து வெறும் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 60 ரன்கள் விளாசினார். சென்னை சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

Livingstone

- Advertisement -

திணறும் சென்னை:
அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அவருடன் களமிறங்கிய ராபின் உத்தப்பா 13 ரன்களில் அவுட்டானர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி டக் அவுட்டானதால் அதிர்ச்சி அடைந்த சென்னை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அந்த அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும் 13 (21) ரன்களில் அவுட்டாகி சென்னைக்கு கைகொடுக்க தவறியதால் 36/5 என தடுமாறிய அந்த அணியின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

அந்த இக்கட்டான நிலையில் எம்எஸ் தோனியுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சிவம் துபே அதிரடியாக 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 57 ரன்கள் எடுத்ததால் 100 ரன்களை கடந்து சென்னை ஓரளவு தப்பியது. இருப்பினும் முக்கியமான நேரத்தில் அவர் அவுட்டாக கடைசி நேரத்தில் அவருடன் விளையாடிய எம்எஸ் தோனியும் 23 (28) ரன்களில் ஆட்டம் இழந்ததால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை 126 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை பெற்றுள்ள சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து திண்டாடுகிறது.

CSK vs PBKS 3

தடுமாறும் புதிய கேப்டன் ஜடேஜா:
இந்த அடுத்தடுத்த தோல்விகளால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவிந்திர ஜடேஜா சொந்தக்காரராகியுள்ளார். ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் நட்சத்திரம் எம்எஸ் தோனியின் தலைமையில் 12 சீசன்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 11 வருடங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 4 கோப்பைகளை வென்று வரலாற்றில் 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ளது. அந்த நிலையில் 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி 40 வயதை கடந்த காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கேப்டனை வளர்ப்பதற்காக ஜடேஜாவை தேர்வு செய்து அவரிடம் தனது கேப்டன்சிப் பொறுப்பை ஒப்படைத்து அவரின் கீழ் சாதாரண வீரராக விளையாட தொடங்கியுள்ளார்.

- Advertisement -

அதிலும் ஐபிஎல் 2022 தொடர் துவங்குவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக ரவீந்திர ஜடேஜாவிடம் திடீரென அவர் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். அப்படிப்பட்ட நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜா கேப்டனாக முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்து தனது கேப்டன்சிப் பயணத்தில் ஆரம்பத்திலேயே தடுமாறுகிறார். அதிலும் கடந்த 2019-க்கு பின் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிய அவர் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு அதிரடியாக விளையாடி பல தேடி தந்தார்.

MS Dhoni Jadeja

குறிப்பாக கடந்த சில வருடங்களாக பினிசெர் என புகழப்படும் எம்எஸ் தோனி ரன்கள் அடிக்க முடியாமல் திணறிய போது அவரின் இடத்தில் களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக ரன்களை குவித்து தரமான வெற்றிகளைத் தேடி கொடுத்து சென்னையின் புதிய பினிஷெராக உருவெடுத்தார். அதன் காரணமாகவே அவருக்குப்பின் சென்னையின் புதிய கேப்டனாகும் அளவுக்கு ஜடேஜாவை உயர்ந்துள்ளார்.

- Advertisement -

பொதுவாகவே நன்றாக விளையாடும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட கேப்டனாக பொறுப்பேற்ற பின் அதன் அழுத்தம் காரணமாக ரன்கள் அடிக்க திணறுவார்கள். அந்த வகையில் சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடர் வரை மிரட்டி வந்த ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றதும் இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் முறையே 26* (28), 17 (9), 0 (3) என அவரின் பேட்டில் ரன்கள் வர அடம்பிடிக்கிறது. இப்படி அவர் பேட்டிங்கில் ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறுவதும் சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

Jadeja

இந்நிலையில் கேப்டன்ஷிப் பிரஷர் பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் ரவீந்திர ஜடேஜா வெளிப்படையாக பேசினார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் பொறுப்பு பற்றி 2 மாதங்கள் முன்பே தோனி என்னிடம் கூறியதால் சென்னையை வழிநடத்த மனதளவில் என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன் என்பதால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. மேலும் எனக்கு உதவியாக தோனி இருக்கிறார்.

இதையும் படிங்க : 100+ மீட்டர் சிக்ஸ் அடிச்சா 8 ரன் தரனும் ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள் – சாஹல் கொடுத்த சரியான நோஸ்கட்

அவர் என்னுடன் இருப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அணியை வழிநடத்த மனதளவில் நான் ஏற்கனவே தயாராகி விட்டேன். எனவே என் மீது எனக்கு எந்த வித அழுத்தமும் கிடையாது. எனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பின்பற்றி வருகிறேன்” என கேப்டன்ஷிப் பிரஷர் தமது பேட்டிங்கில் எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தவில்லை என்று ஜடேஜா கூறினார்.

Advertisement