24 மணி நேரம் மட்டும் ஆஸி நண்பனை பாலோ பண்ணுவேன் – நேதன் லயன் கோரிக்கையை ஏற்ற ஜடேஜா கலகலப்பு

Ravindra Jadeja Nathan Lyon
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ள இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரவிந்திர ஜடேஜா மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று முக்கிய பங்காற்றியுள்ளார்.

கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டராக முன்னேறிய அவர் 2022 ஆசிய கோப்பையில் காயத்தால் பாதியிலேயே வெளியேறி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்கவில்லை. அது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த நிலையில் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜடேஜா முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது பிசிசிஐயை அதிருப்தியடைய வைத்தது. அதனால் இத்தொடரில் விளையாட வேண்டுமெனில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடி உங்களுடைய பார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை நிரூபிக்குமாறு பிசிசிஐ நிபந்தனை விதித்தது.

- Advertisement -

24 மணி நேர நண்பன்:
அந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து இத்தொடரில் விளையாட தேர்வான ஜடேஜா நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 70 ரன்கள் 7 விக்கெட்டுகளும் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 26 ரன்கள் 10 விக்கெட்களும் எடுத்து இந்தியாவுக்கு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்து அபார கம்பேக் கொடுத்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியின் போது 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த நேதன் லயன் ஒரு கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் நட்பு ரீதியாக பேசியுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் 5 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ள ஜடேஜா இது வரை ஒருவரை கூட பாலோ செய்யாமல் இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்த நேதன் லயன் முதல் முறையாக தம்மை முதல் நபராக ஃபாலோ செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

- Advertisement -

குறிப்பாக ஜடேஜா பந்து வீசும் போது எதிர்ப்புறம் பேட்ஸ்மேனாக நின்ற நேதன் லயன் “நீங்கள் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட ஃபாலோ செய்ய மாட்டீர்கள் அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று கேட்டதாக தெரிகிறது. அதை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் முதல் நபராக பக்கத்தில் நேதன் லயனை பாலோ செய்துள்ளார். ஆனால் அது 24 மணி நேரத்துக்குத் தான் என்ற வகையில் “என்னுடைய நண்பன் நேதன் லயனை 24 மணி நேரத்திற்கு பாலோ செய்கிறேன்” என்று அவரை பாலோ செய்வதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவிந்திர ஜடேஜா கலகலப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் 3வது போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் நடைபெறுகிறது. அதில் ஏற்கனவே தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலியா அப்போட்டியில் எப்படியாவது வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க போராட உள்ளது. இருப்பினும் வேகப்பந்து வீச்சுக்கு விளையாட பழகிய அவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் தரமான சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க:எந்த பகையும் இல்ல அக்கறைல சொல்றேன் பார்முக்கு திரும்ப அதை செய்ய முடியுமா? ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் கோரிக்கை

மறுபுறம் தொடர்ச்சியான செயல்பாடுகளால் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ள இந்தியா அப்போட்டியிலும் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும் எண்ணத்துடன் களமிறங்க உள்ளது.

Advertisement