எந்த பகையும் இல்ல அக்கறைல சொல்றேன் பார்முக்கு திரும்ப அதை செய்ய முடியுமா? ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் கோரிக்கை

Venkatesh-Prasad
Advertisement

கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்டாலும் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான தொடக்க வீரராக உருவெடுத்தார். அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியதால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாளடைவில் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

KL-Rahul

இருப்பினும் அடுத்த கேப்டனாக உருவாக்க நினைத்த அவரைத் துணை கேப்டனாக அறிவித்த பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது சமீப காலங்களாகவே ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு உச்சகட்ட பார்மில் இருந்தும் ராகுல் வாய்ப்பு பெறுவது ஏன் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அத்துடன் தரமான வீரர் என்பதற்காக அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கு கிடைக்காதது ஏன் என்பதும் ரசிகர்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

- Advertisement -

பகை இல்ல ஆனால்:
அப்படி ஆரம்பத்தில் ரசிகர்கள் மட்டும் விமர்சித்து வந்த ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சமீபத்தில் தனது ட்விட்டரில் வெளிப்படையாகவே ஆதாரங்களுடன் விமர்சித்தார். குறிப்பாக 8 வருடங்களாக விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்த அவர் உங்களால் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளிப்படையாக தாக்கினார்.

Venkatesh prasad KL rahul

அத்துடன் உங்களை விட அஷ்வின் துணை கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர் என்று தெரிவித்த அவர் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ராகுளை மீண்டும் ட்விட்டரில் விமர்சித்தார். அதனால் ராகுல் மீதிருக்கும் பகைமை காரணமாகவே வெங்கடேஷ் பிரசாத் இவ்வாறு பேசுவதாக அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் ராகுல் மீது எந்த பகைமையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள வெங்கடேஷ் பிரசாத் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதை விட இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்முக்கு திரும்ப 2023 ஐபிஎல் தொடரை புறக்கணித்து விட்டு இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் உங்களால் விளையாட முடியுமா? என்றும் ராகுலுக்கு அவர் சவாலான கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் மீண்டும் பேசியுள்ளது பின்வருமாறு.  “சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியே நேர்மாறானது. ஏனெனில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருப்பினும் இந்த பார்மில் தொடர்ந்து விளையாடுவது நிச்சயமாக அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்காது”

“எனவே அவர் டெஸ்ட் அணியில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஆனால் உள்ளூர் (ரஞ்சி) சீசன் முடிவுக்கு வந்து விட்டது. எனவே புஜாரா நீக்கப்பட்ட போது இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி ரன்களை அடித்து மீண்டும் தனது இடத்தை பிடித்தது போல் ராகுலும் விளையாட வேண்டும். ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும். ஆனால் இதற்காக உங்களால் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க முடியுமா” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா ஒன்னும் புதுசா சாதிக்கல, அவர் செஞ்சத அப்டியே செய்றாரு – முன்னாள் கேப்டனை ஓப்பனாக பாராட்டிய கம்பீர்

அவர் கூறுவது போல கடந்த வருடம் அதிரடியாக நீக்கப்பட்ட புஜாரா கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி தான் மீண்டும் கம்பேக் கொடுத்து 100 போட்டியில் விளையாடிய 12வது இந்திய வீரராக சாதனை படைத்தார். அதே போல நீங்களும் செயல்பட முடியுமா என்று ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் சவாலான கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement