ரோஹித் சர்மா ஒன்னும் புதுசா சாதிக்கல, அவர் செஞ்சத அப்டியே செய்றாரு – முன்னாள் கேப்டனை ஓப்பனாக பாராட்டிய கம்பீர்

Gautam Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 2017, 2018/19, 2020/21 ஆகிய வருடங்களைத் தொடர்ந்து இந்த வருடத்தின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைத்துள்ள இந்தியா அந்த கோப்பையை தொடர்ச்சியாக 4 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையும் படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியா புதிய வரலாறு படைத்தது.

மொத்தத்தில் இந்த தொடர் வெற்றிகளுக்கு விராட் கோலி மட்டும் தான் முழுமையான காரணமானவர் என்றே சொல்லலாம். ஏனெனில் 2014இல் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற போது ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியா சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக இருந்தது. ஆனால் வெளிநாட்டில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய மண்ணில் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் என்ற அணுகுமுறையை கொண்டு வந்த அவர் தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
குறிப்பாக மிரட்டலை கொடுக்கும் எதிரணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே தெறிக்க விடும் பயமற்ற அணியாக இந்தியாவை மாற்றிய அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாகவும் சாதனை படைத்தார். அப்படி இந்தியாவை வெற்றிகரமான அணியாக மாற்றி கடந்த வருடம் சர்ச்சைக்குரிய முறையில் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த அவருக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா ஏற்கனவே இருக்கும் வலுவான அணியை பயன்படுத்தி தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

Kohli-1

இந்நிலையில் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி உருவாக்கிய அணியை வைத்து விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தி தான் வெற்றிகரமாக செயல்படுவதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடைய கேப்டன்ஷிப் இடையே குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வித்தியாசமில்லை. ஏனெனில் விராட் கோலி தான் இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார்”

- Advertisement -

“என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார். ரோகித் சர்மா அவருடைய டெம்ப்ளேட்டை மட்டுமே பின்பற்றி வருகிறார். அந்த வகையில் உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா தனது ஸ்டைலில் தனக்காக எந்த ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் உருவாக்கவில்லை. குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எப்படி பயன்படுத்தினாரோ அதே நிலைமை தான் தற்போதும் நீடிக்கிறது”

Gambhir

“எனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனால் அங்கே விராட் கோலி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய இந்த அணியை விராட் கோலி தான் உருவாக்கினார். அதனாலேயே அவர் வெற்றிகரமாக செயல்பட்டார். இந்திய மண்ணில் ரோஹித் மற்றும் விராட் அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடுகளில் எந்த வித்தியாசமும் இல்லை. மாறாக ரோகித் சர்மாவுக்கு வெளிநாடுகளில் தான் கேப்டன்ஷிப் செய்வதில் சவால் காத்திருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : எனக்கு எதிரா இந்த ஷாட் மட்டும் விளையாடாதீங்க. ஆஸி வீரர்களை எச்சரித்த – ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

அவர் கூறுவது போல முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்த தொடரில் தான் முதல் முறையாக ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டனாக செயல்படுகிறார். எனவே வெளிநாடுகளில் தான் அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement