
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணியில் விராட் கோலி காயத்தால் விலகிய நிலையில் ராணா, ஜெய்ஸ்வால் அறிமுகங்களாக களம் இறங்கினார்கள். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பில் சால்ட் 43 (26) ரன்களை விளாசி அச்சுறுத்தல் கொடுத்து ரன் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய பென் டக்கெட்டை 32 ரன்களில் அவுட்டாக்கிய ராணா அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக்கை டக் அவுட்டாக்கினார்.
அதனால் 77-3 என இங்கிலாந்து தடுமாறிய போது நங்கூரமாக விளையாட முயற்சித்த ஜோ ரூட்டை 19 ரன்களில் ரவீந்திர ஜடேஜா காலி செய்து சர்வதேச கிரிக்கெட்டில் 12வது முறையாக அவுட்டாக்கினார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 4 பவுண்டரியுடன் அரை சதமடித்த போது 52 (67) ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அதற்கடுத்ததாக வந்த லிவிங்ஸ்டனை 5 ரன்களில் ராணா அவுட்டாக்கி அசத்தினார்.
இருப்பினும் ஜேக்கப் பேத்தல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் பிரைடன் கார்ஸ் 10, அடில் ரசித் 8 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் ஜேக்கப் அரை சதமடித்து 51, ஜோப்ரா ஆர்ச்சர் 21* ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை 47.4 ஓவரில் 248 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு ராணா 3, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார்கள்.
இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா 600 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். குறிப்பாக 323 டெஸ்ட், 223 ஒருநாள், 54 டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் மொத்தம் அவர் 600 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது போக பேட்டிங்கில் ஏற்கனவே அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 6000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னை மாதிரி ஆகிடாதீங்க கம்பீர்.. பாகிஸ்தானை ஜெய்க்கல்லன்னா டிரைவர் கூட கேட்பாரு.. ரவி சாஸ்திரி
இதன் வாயிலாக கபில் தேவுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். 6000 ரன்கள், 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின்போன்ற வேறு ஸ்பின்னர்கள் இந்த சாதனையை படைத்ததில்லை.