- Advertisement -
இந்திய கிரிக்கெட்

115 வருடத்துக்கு பின்.. தெ.ஆ அணிக்கு எதிரான 2 உலக சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா

கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 201க்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஜடேஜா சாதனை:

அடுத்ததாக 288 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 260/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 549 என்ற இமாலய இலக்கை துரத்தும் இந்தியா வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 2 இன்னிங்லும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். அதையும் சேர்த்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மொத்தமாக 52 விக்கெட்டுகளை 19.63 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20க்கும் குறைவான சராசரியில் 50+ விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற வால்ஷின் உலக சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.

- Advertisement -

115 வருடங்கள் கழித்து:

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20க்கும் குறைவான (19.80) சராசரியில் 50+ விக்கெட்டுகளை எடுத்த ஒரே பவுலராக சாதனை படைத்திருந்தார். அத்துடன் அனில் கும்ப்ளே (84), ஜவஹல் ஸ்ரீநாத் (64), ஹர்பஜன் சிங் (60), ரவிச்சந்திரன் அஸ்வின் (57) ஆகியோருக்குப் பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட்டுகள் எடுத்த 5வது இந்திய பவுலர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றார்.

இதையும் படிங்க: 549 ரன்ஸ் முடிஞ்சா அடிங்க.. 21 வருட சாதனையை உடைத்த தெ.ஆ.. இந்தியாவுக்கு உலக சாதனை இலக்கு

அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50+ விக்கெட்டுகளை எடுத்த 2வது இடது கை ஸ்பின்னர் என்ற உலக சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் 1906 – 1910 காலகட்டங்களில் இங்கிலாந்துக்காக விளையாடிய கோலின் ப்ளய்த் இடது கை ஸ்பின்னராக 59 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவருக்குப் பின் 115 வருடங்கள் கழித்து ஜடேஜா அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -