தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக 2வது போட்டி கௌகாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தைப் பெற்றது.
அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தெ.ஆ உலக சாதனை:
அதைத்தொடர்ந்து 288 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவை பந்தாடி 260/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெடுகளை சாய்த்தார். இதைத் தொடர்ந்து இந்தியா வெற்றி பெற 549 என்ற இமாலய இலக்கை தென்னாபிரிக்கா நிர்ணயித்துள்ளது.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச இலக்கை நிர்ணயித்த வெளிநாட்டு அணி என்ற உலக சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் 2004 நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 543 ரன்களை இலக்காக நிர்ணயித்தது முந்தைய அதிகபட்ச இலக்காகும். அந்த 21 வருட சாதனையை இன்று தென்னாப்பிரிக்கா உடைத்துள்ளது.
முடிஞ்சா அடிங்க:
2004 நாக்பூர் போட்டியில் 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதே போல இப்போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆசியக் கண்டத்தில் உலகின் எந்த அணியும் வெற்றிகரமாக 400 ரன்களை கூட சேசிங் செய்தது கிடையாது.
இதையும் படிங்க: அவரை ஆல் ரவுண்டர்ன்னு எப்படி சொல்றிங்க? அவருக்கு பதில் சர்பராஸ் ஆடலாமே.. ஸ்ரீகாந்த் விமர்சனம்
அதிகபட்சமாக கடந்த 2021 சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 395 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச இலக்காகும். இந்திய மண்ணில் 2008 சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 387 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச இலக்காகும். அதனால் இப்போட்டியை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.



