ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணியை அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் தோற்கடித்து பெங்களூரு அசத்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்த்ரா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ருதுராஜ், ராகுல் திரிபாதி, சாம் கரண் உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் கடைசியில் தோனி 30* ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 146-8 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது.
ஜடேஜாவின் சாதனை:
அதன் காரணமாக இந்த வருடம் பெங்களூரு தங்களது 2 போட்டிகளில் 2வது வெற்றியைப் பெற்று அசத்தியது. மறுபுறம் தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் பெங்களூரு அணியிடம் 17 வருடங்கள் கழித்து தோற்றது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக இந்தப் போட்டியில் எடுத்த 25 ரன்களையும் சேர்த்து சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் 3001 ரன்களை அடித்துள்ளார்.
இது போக ஏற்கனவே பந்து வீச்சில் அவர் 160 விக்கட்டுகளையும் சாய்த்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 3000+ ரன்களையும் 100+ விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் வேறு எந்த ஆல் ரவுண்டர் வீரர்களும் இந்த சாதனையை படைத்ததில்லை.
சறுக்கிய சென்னை:
அந்த வகையில் ஐபிஎல் தொடரின் சிறந்த ஆல் ரவுண்டராக ஜடேஜா செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து சென்னை அணி தங்களது அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது. அந்தப் போட்டி மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தி நகரில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தோத்தது கூட பரவாயில்ல.. ஆனா தல இப்படி பண்ணத ஏத்துக்கவே முடியல – வருத்தத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்
அந்தப் போட்டியில் சென்னை சிறப்பாக விளையாடி பெரிய வெற்றியை பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் இந்தப் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் -1.013 என்ற மோசமான ரன் ரேட்டை சென்னை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ள சென்னை 10 அணிகளில் 2வது மோசமான ரன்ரேட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



