வீடியோ : உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை தொடர்ந்து பெட்டி பாம்பாக அடக்கும் ஜடேஜா – கபில் தேவுக்கு பின் அபார சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சித்து செயலில் சொதப்பிய ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

அந்த நெருக்கடி காரணத்தாலேயே மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை ஆரம்பத்திலேயே சுழல துவங்கிய பிச்சில் கச்சிதமாக பந்து வீசி வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது. ரோஹித் சர்மா 12, புஜாரா 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலியாவுக்கு ட்ராவிஸ் ஹெட்டை 9 ரன்களில் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்கு சிறந்த தொடக்கம் கொடுத்தார்.

- Advertisement -

கபில் தேவுக்கு நிகராக:
இருப்பினும் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். ஆனால் 35வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அற்புதமான பந்தால் அவருடைய தடுப்பை உடைத்து கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் ஏமாற்றத்துடன் சென்ற லபுஸ்ஷேன் பெவிலியன் திரும்பியதும் எப்படி அவுட்டானோம் என்பதை டிவியில் பார்த்து தனக்குத்தானே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சொல்லப்போனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவரை இந்த தொடரில் மட்டும் 4 முறை அவுட்டாக்கியுள்ள ரவீந்திர ஜடேஜா ஒட்டுமொத்தமாக 5 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட்டாக்கி பெட்டி பாம்பாக அடக்கி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி பாராட்ட வைக்கிறது. அதே வேகத்தில் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சவாலை கொடுத்த உஸ்மான் கவஜாவை 60 ரன்களில் காலி செய்த அவர் நங்கூரத்தையும் போட முயன்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்த்தையும் 26 ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இருப்பினும் முதல் நாள் முடிவில் 156/4 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையுடன் விளையாடுகிறது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியாவுக்கு பந்து வீச்சில் இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் எடுக்காத நிலையில் ரவீந்திர ஜடேஜா 4* விக்கெட்டுகளை எடுத்து தனி ஒருவனை போல் போராடி வருகிறார். முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்து இத்தொடரின் முதலிரண்டு இந்தியாவின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இப்போட்டியில் எடுத்த 4 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 263 விக்கெட்களை எடுத்துள்ளார்.

மேலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முறையே 189 மற்றும் 51 விக்கெட்களை எடுத்துள்ள அவர் மொத்தமாக 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்த்து 503* விக்கெட்களை சாய்த்துள்ளார். அதே போல பேட்டிங்கில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டில் முறையே 2623, 2447, 457 என மொத்தம் 5527* ரன்களையும் அவர் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் கபில் தேவுக்குப்பின் 5000+ ரன்கள் மற்றும் 500+ விக்கெட்டுகளை எடுத்த 2வது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : நீங்க எப்போதான் திருந்துவிங்க, 4 விக்கெட்களை எடுத்தும் ஜடேஜாவை விளாசும் சாஸ்திரி – கவாஸ்கர், நடந்தது என்ன

கபில் தேவ் 9031 ரன்கள் மற்றும் 687 விக்கெட்களை எடுத்து இந்த சாதனையை முதல் இந்தியராக படைத்தார். அத்துடன் கபில் தேவ், வாசிம் அக்ரம், ஜாக் காலிஸ், ஷாகிப் அல் ஹசன், இம்ரான் கான், ஷாஹித் அஃப்ரிடி, டேனியல் வெட்டோரி, சமீந்தா வாஸ், ஷான் பொல்லாக், இயன் போத்தம் ஆகியோருக்கு பின் இந்த சாதனையை படைக்கும் 11வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisement