IND vs AUS : நீங்க எப்போதான் திருந்துவிங்க, 4 விக்கெட்களை எடுத்தும் ஜடேஜாவை விளாசும் சாஸ்திரி – கவாஸ்கர், நடந்தது என்ன

Sunil Gavaskar Jadeja
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே எதிர்பாராத அளவுக்கு தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் 33.2 ஓவரில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 9 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 98 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 31 ரன்கள் எடுத்திருந்த போது ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் போல்ட்டானார்.

- Advertisement -

எப்போதான் திருந்துவாரு:
அவருடன் மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த உஸ்மான் கவஜா அரை சதமடித்து 60 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாக்கிய ஜடேஜா அடுத்ததாக வந்து நங்கூரத்தை போட முயன்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும் 26 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் முதல் நாள் முடிவில் 156/4 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நல்ல நிலையை எட்டியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் விக்கெட் எடுக்காமல் தடுமாறிய நிலையில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்திய ரவீந்திர ஜடேஜா டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கி முதல் விக்கெட்டை எடுத்தார்.

அதே வேகத்தில் அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேனையும் 0 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கினார். ஆனால் அது நோபால் என்று நடுவர் அறிவித்ததால் மேற்கொண்டு 31 ரன்கள் எடுத்த லபுஸ்ஷேன் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் நாளிலேயே இப்போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இதே போல ஸ்டீவ் ஸ்மித்தை நோபாலில் அவுட்டாக்கிய ஜடேஜா இந்த தொடரில் இதுவரை மொத்தம் 8 நோபால்களை வீசியுள்ளார்.

- Advertisement -

பொதுவாக பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை வழங்குவதை கூட பரவாயில்லை ஆனால் நோபால் வீசுவதை மன்னிக்கவே முடியாது என்று வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால் சாம்பியன் வீரருக்கு அடையாளமாக இல்லாமல் இப்படி தொடர்ந்து நோபால் வீசுவதை வழக்கமாக வைத்துள்ள ரவீந்திர ஜடேஜா இப்போட்டியின் முதல் நாளில் 4 விக்கெட்டுகளை எடுத்தும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். குறிப்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இது பற்றி ஏமாற்றத்துடன் விமர்சித்தது பின்வருமாறு.

“இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இத்தனைக்கும் கடந்த 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்று சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அவர் இவ்வாறு நோபால் வீசுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது இந்தியாவின் தோல்விக்கு காரணமாகவும் அமையலாம். என்n கேட்டால் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே அவருடன் உட்கார்ந்து வெள்ளை கோட்டுக்கு உள்ளே பந்து வீசுவது பற்றி பேசி பயிற்சி கொடுக்க வேண்டும். ஏனெனில் அது இன்று நடக்காமல் இருந்திருந்தால் மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டாகியிருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:7 மாசமா ஒரு மேட்ச் கூட ஆடல. ஆனா டெஸ்ட் தரவரிசையில் பும்ரா பிடித்திருக்கும் இடம் – என்ன தெரியுமா?

அவருடன் ரவி சாஸ்திரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது பின்வருமாறு. “இது போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இது போன்ற சிறிய தவறுகள் கூட உங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசளிக்கலாம்” என்று கூறினார்.

Advertisement