2வது போட்டியில் இருந்து விலகிய ராகுல், ஜடேஜா.. தமிழக வீரர் உட்பட 3 இளம் மாற்று வீரர்களை அறிவித்த பிசிசிஐ

Rahul and Jadeja
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. குறிப்பாக இந்தியாவை அவர்களுடைய சொந்த ஊரிலேயே வீழ்த்துவோம் என்று சொன்னதை செய்து காட்டியுள்ள இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

மறுபுறம் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் முதல் 3 நாட்கள் அபாரமாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா கடைசியில் பேட்டிங்கில் சொதப்பி தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 2வது போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

- Advertisement -

மாற்று வீரர்கள்:
முன்னதாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் முக்கியமான நேரத்தில் சிங்கிள் எடுத்த ரவீந்திர ஜடேஜா துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி தசை பிடிப்பு காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 2வது போட்டியில் அவர் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே போல நட்சத்திர வீரர் கேஎல் ராகுலும் அந்த போட்டியின் போது காயத்தை சந்தித்து வலியை உணர்வதாக மருத்துவ குழுவிடம் தெரிவித்துள்ளார். எனவே அவரும் 2வது போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்போதைக்கு இந்திய அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர்கள் 3வது போட்டியில் விளையாடுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே சமயம் அந்த 2 வீரர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் ஆகிய 3 இளம் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்களை குவித்து போராடி வந்த சர்பராஸ் கானுக்கு ஒரு வழியாக இந்திய அணியில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு குத்தமா? பும்ராவுக்கு ஐசிசி வழங்கிய அதிரடி தண்டனை.. காரணம் என்ன?

அதே போல வாஷிங்டன் சுந்தரும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதால் 2021 காபா போட்டிக்கு பின் டெஸ்ட் அணியில் விளையாட தேர்வாகியுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியை வைத்துள்ளது. மேலும் சௌரப் குமார் உள்ளூர் தொடரில் அசத்தி வருவதால் இந்திய அணியை வலு சேர்ப்பதற்காக ஜடேஜாவுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் ஜடேஜா மற்றும் ராகுல் ஆகிய 2 முக்கியமான வீரர்கள் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement