
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கவுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் தமிழக வீரரான சாய் சுதர்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் போட்டியின் போது முதல் இன்னிங்சில் 7 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்த அவர் இரண்டாவது போட்டியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாய் சுதர்சனுக்கு கூடுதலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில் கூறியதாவது : சாய் சுதர்சன் உண்மையிலேயே மிகவும் திறமையான வீரர். நிச்சயம் அவர் இரண்டாவது போட்டியில் அதிகளவு ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன்.
ஒருவேளை அவர் அடுத்த போட்டியில் சேர்க்கப்படவில்லை என்றால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். ஏனெனில் இந்திய அணியில் இடம் பிடிக்க பல்வேறு வீரர்கள் வரிசையாக காத்திருக்கின்றனர். எனவே அடுத்த போட்டி சாய் சுதர்ஷனுக்கு முக்கியமான டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது ஏன்? – மனம் திறந்த முகமது ஷமி
நிச்சயம் அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி நிரந்தர இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.