- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ZIM : பாவம் அவங்க எப்படி ஜெயிப்பாங்க, ஜிம்பாப்வேயின் தொடர் தோல்விக்கான காரணத்தை விளக்கும் தமிழக வீரர்

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் மோசமாக விளையாடிய ஜிம்பாப்வே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. இத்தொடரின் முதல் போட்டியில் தீபக் சஹர் போன்ற தரமான இந்திய பவுலர்களின் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 81* சுப்மன் கில் 82* என தொடக்க வீரர்களே 192 பார்ட்னர்ஷிப் அமைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் அதைவிட மோசமாக செயல்பட்ட ஜிம்பாப்வே மீண்டும் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் 43*, ஷிகர் தவான் 33, சுப்மன் கில் 33 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா முன்கூட்டியே தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

- Advertisement -

பரிதாப ஜிம்பாப்வே:
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிராக இதே ஹராரே மைதானத்தில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜிம்பாப்வே அந்த 2 தொடர்களையும் நீண்ட நாட்களுக்கு பின் வென்று அசத்தியது. அதனால் நல்ல பார்மில் இருந்த அந்த அணியின் பயிற்சியாளரும் சில முக்கிய வீரர்களும் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத 2வது தர இந்திய அணியை முடிந்தளவுக்கு சவால் கொடுத்து தோற்கடித்து கோப்பையை வெல்வோம் என்று எச்சரித்திருந்தனர்.

ஆனால் சொன்னதுக்கு ஏற்றார்போல் களத்தில் செயல்படாத அந்த அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிகந்தர் ராசா, இன்னசென்ட் கயா போன்ற முக்கிய வீரர்கள் கணிசமான அளவு கூட சிறப்பாக செயல்படாததால் சொந்த மண்ணில் தலைகுனியும் அளவுக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஒரு காலத்தில் ஆண்டி பிளவர் போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருந்த ஜிம்பாப்வே இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை அசால்டாக வெல்லும் பலமான அணியாக இருந்தது.

- Advertisement -

விளக்கும் அஷ்வின்:
ஆனால் 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் கிடைக்காததால் கத்துக்குட்டியாக மாறிப்போன அந்த அணி அதிலிருந்து மீண்டுவர முடியாமல் திண்டாடி வருகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி தான் அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமென்று தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்கும் ஒரு இந்திய வீரரின் குறைந்தபட்ச விலை 20 லட்சமாக இருக்கும் நிலையில் ஜிம்பாப்வேயில் நடைபெறும் தேசிய பிரீமியர் லீக் டி20 தொடரின் ஒட்டுமொத்த பரிசு தொகையே வெறும் 8.50 லட்சம் என்பதே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என கூறியுள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“உலக கிரிக்கெட்டைப் பற்றி ஒரு கட்டுரையில் படித்தேன். அது எங்கெல்லாம் பணம் கொழிக்கிறதோ அங்கெல்லாம் சரியான வாய்ப்புகள் கிடைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு வழி வகுப்பதாக கூறியது. எடுத்துக்காட்டாக ஜிம்பாப்வேவுக்கு இந்தியா அனுப்பிய 15 பேர் கொண்ட அணியில் வாசிங்டன் சுந்தர் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் சபாஷ் அகமத் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் விளையாடி வரும் அவருடைய முழுமையான சம்பளம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக அவர் கோடிகளை வாங்குவார் என்று தெரியும்”

“ஆனால் ஜிம்பாப்வே தேசிய டி20 லீக் தொடரின் பரிசுத்தொகை வெறும் 10000 (8.5 லட்சம்) டாலர்களாகும். இருப்பினும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரரின் அடிப்படை விலை தொகை 20 லட்சமாகும். ஒரு கட்டத்தில் ஜிம்பாப்பே தனது வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்தது. அதன்பின் வாரியத்தில் புதிதாக பொறுப்பேற்றவர்கள் அதை கொடுத்தனர். ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் இன்னும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. இந்த தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு பாராட்டுக்களும் பரிசுத் தொகையும் கிடைத்து உத்வேகத்தையும் வளர்ச்சியையும் கொடுக்கும்” என்று கூறினார்.

அதாவது பொருளாதார நெருக்கடியால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் ஜிம்பாப்வே வாரியம் தவிப்பதே தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் கிடைக்காததற்கு காரணமென்று அஷ்வின் கூறியுள்ளார். அவர் கூறுவது போல கடந்த வருடம் நல்ல ஷூ இல்லாமல் ஜிம்பாப்வே வீரர் ரியன் புர்ள் கண்ணீர் விட்ட போது அவருக்கு புமா நிறுவனம் ஷூக்களை வழங்கி வாழ்வளித்ததை அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மொத்தத்தில் பொருளாதார அடிப்படையில் ஜிம்பாப்வே திணறுவதே களத்திலும் தடுமாற முக்கிய காரணமாகும்.

- Advertisement -
Published by