சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரோடு ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது 44 வயதாகும் மகேந்திர சிங் தோனி கடந்த சில ஆண்டுகளாகவே கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாக கடந்த ஆண்டு பெரியளவில் பாதிப்பை சந்தித்த அவர் இந்த ஆண்டு விளையாடுவதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
தோனி இந்த ஆண்டு விளையாடுவது சந்தேகம் : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆனால் இந்த ஆண்டு துவங்கிய 2026 ஐ.பி.எல் தொடருக்கு ஒரு நாள் முன்னதாக மீண்டும் கணுக்கால் பகுதியில் காயமடைந்தார். அதன் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்ட தோனி தொடர்ந்து சி.எஸ்.கே அணியில் இணைந்து விளையாடாமல் இருந்து வருகிறார்.
இதுவரை சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் இதுவரை தோனி அணிக்கு திரும்பவில்லை இனிமேலும் தோனி வருவாரா? என்பது கேள்விக்குறியாகவே மாறியுள்ளது. இந்நிலையில் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு சில முக்கிய கருத்துக்களை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு மிக சிறிய அளவிலான வாய்ப்புகளே உள்ளது. என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி தங்களது கடைசி மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்றுவிட்டால் நிச்சயம் அவர் சேப்பாக்கம் போட்டியில் கடைசியாக தனது ஃபேர்வெல் மேட்சை விளையாடுவார். இல்லையெனில் இந்த ஆண்டு அவர் விளையாட வாய்ப்பில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இன்றைய போட்டியில் பங்கேற்பதன் மூலம் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்யப்போகும் – விராட் கோலி
இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தால் மட்டுமே தோனி கடைசியாக ஒரு போட்டியில் விளையாடி விட்டு விடை பெறுவார் என்பதை அஷ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் தற்போது சென்னை அணி மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கும் வேளையில் அணியின் காம்பினேஷனை மாற்றக்கூடாது என்பதற்காக தோனி இடம்பெறாமல் இருந்து வருவதாகவும் அவர் விரைவில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.



