
ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று மூன்று தோல்விகளை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. அதோடு அந்த அணியின் ரன் ரேட்டும் -0.772 என்கிற நிலையில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான நிலையை சந்தித்திருந்த வேளையில் இந்த ஆண்டு நிச்சயம் மிகச்சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை நடைபெற்றுள்ள நான்கு ஆட்டங்களில் மூன்று தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இனிவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் தான் பிளேஆப் சுற்றிற்கான போட்டியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வலிமையான வீரர்களை வைத்துக் கொண்டும் தோல்வியை சந்தித்து வருவது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீரர்களின் பெயர் பட்டியலை வைத்து பார்க்கும்போது மிக வலிமையாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தாலும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதற்கு என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய மும்பை அணி முழுமையாக ரோகித் சர்மாவை மட்டும் சார்ந்தது இல்லை. ஏனெனில் அவர்களிடம் மிகவும் வலிமையான பேட்டிங் லைன் அப் இருக்கிறது. எனவே நிச்சயம் மும்பை அணியால் எவ்வளவு ரன்களை வேணாலும் அடிக்க முடியும். இப்படி பேட்டிங்கில் மும்பை அணி சிறப்பாக இருந்தாலும் அவர்களை பின்னுக்கு தள்ளுவது அவருடைய பந்துவீச்சு யூனிட் தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் மும்பை அணியில் சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் கிடையாது.
இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணி 500 ரன்கள் அடிச்சா தான் ஜெயிக்க முடியும்.. காரணத்துடன் விமர்சித்த – சீக்கா ஸ்ரீகாந்த்
அதே சமயம் பும்ரா அற்புதமாக பந்து வீசினாலும் அவருக்கு தேவையான ஆதரவு மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவதில்லை. இந்த ஆண்டு மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட்டு வரும் ட்ரென்ட் போல்ட் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இதுதான் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மும்பை அணியிடம் வலிமையான பேட்டி லைன் இருந்தும் சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாததே அந்த அணியின் சரிவுக்கு காரணமாக பார்ப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.