தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவையை 6 விக்கெட் வித்யாசத்தில் திண்டுக்கல் தோற்கடித்தது. அதனால் அஸ்வின் தலைமையில் முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்று திண்டுக்கல் வரலாறு படைத்தது.
இந்தத் தொடரில் அழுத்தமான எலிமினேட்டர் நாக் அவுட் போட்டியில் அரை சதமடித்த அஸ்வின் குவாலிபயர் 2 போட்டியிலும் அரை சதத்தை விளாசினார். அதே போல இறுதிப் போட்டியிலும் 130 ரன்களை துரத்தும் போது 52 ரன்கள் குவித்த அவர் நாக் அவுட் சுற்றில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து திண்டுக்கல் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சாம்பியன் கேப்டன் அஸ்வின்:
இந்நிலையில் ஃபைனலில் தங்களுடைய அணியின் இளம் வீரர் சரத்குமார் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் போல ஃபீல்டிங் செய்ததாக அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் இத்தொடரில் தலைமைப் பயிற்சியாளர் இல்லாமலேயே திண்டுக்கல் கோப்பையை வென்றது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றி அனைத்து போன போக்கில் நடந்தது. இத்தொடரில் சேலத்திடம் தோற்ற ஒரே அணி நாங்கள் தான்”
“அப்படி இத்தொடரை நாங்கள் நன்றாக துவங்கவில்லை. ஆனால் சரியான நேரத்தில் நாங்கள் வேகத்தை பெற்றோம். ஃபைனலில் எங்கள் வீரர் சரத்குமார் கிட்டத்தட்ட ஜான்டி ரோட்ஸ் போல அனைத்து இடங்களிலும் டைவ் அடித்து அசத்தியதற்காக பாராட்ட வேண்டும். இத்தொடருக்கு துவக்க வீரராக களமிறங்கும் எண்ணத்துடன் நான் வந்தேன். இத்தொடரில் எங்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் இல்லை”
“இருக்கும் 2 துணைப் பயிற்சியாளர்களும் என்னுடைய நண்பர்கள். ஆரம்பத்தில் நான் ஓப்பனிங்கில் களமிறங்க விரும்பினேன். ஆனால் பிட்ச் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு பயிற்சியாளர்களுடன் இணைந்து விவாதித்து மிடில் ஆர்டரில் விளையாட முடிவெடுத்தேன். கிரிக்கெட்டை தாண்டி இந்த தொடரில் திண்டுக்கல் அணியுடன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பயணித்தேன்”
இதையும் படிங்க: அதீத தன்னம்பிக்கையுடன் எடுத்த தேவையற்ற முடிவால் இந்தியாவை தலைகுனிய வைத்த கெளதம் கம்பீர்.. ரசிகர்கள் விளாசல்
“இந்த வருடம் துஷார் ரஹீஜா, சித்தார்த் போன்ற வீரர்கள் தங்களுடைய வரம்பை தாண்டி வெற்றிக்காக முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன். டிஎன்பிஎல் தொடரில் அசத்தியதாலேயே இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் சித்தார்த் வாய்ப்பு பெற்றது எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அதே போல சந்திப் வாரியர், சிவம் சிங் ஆகியோரும் இத்தொடரில் அசத்தினார்கள். டிஎன்பிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக முழுமையாக விளையாட விரும்பியும் முடியவில்லை. ஆனால் இம்முறை நான் முழுமையாக விளையாடியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.



